இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாகச் சிறு வயதிலேயே பிரிந்துவிட்ட சகோதரர்கள் இருவர், 74 வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்டு அன்பை பரிமாறிய சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை நடைபெற்று அரைநூற்றாண்டுகள் ஆகிறது. கடந்த 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சகோதரர்களில் மூத்தவர் ஹபீப் இந்தியாவில் தங்க, மற்றொருவரான சித்திக் பாகிஸ்தானுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் ஹபீப் தனது தாயுடன் பஞ்சாப்பில் வசித்து வந்திருக்கிறார்.
80 வயதான ஹபீப் தற்போது பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான கர்தார்பூருக்குச் சென்றுள்ளார். அங்கு சிறு வயதிலேயே பிரிந்துவிட்ட தனது சகோதரர் சித்திக்கை சந்தித்துள்ளார். இதனால மனம் நெகிழ்ந்து சந்தோஷத்தில் அவரைக் கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்திருக்கிறது.
மேலும் 74 வருடப் பிரிவிற்குப் பிறகு ஹபீப் மற்றும் சித்திக் இந்தச் சந்திப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.