இலங்கைசெய்திகள்

வடக்கில் வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சினை உடன் தீர்க்கப்பட வேண்டும் – சஜித்திடம் யாழ். ஆயர் கோரிக்கை!!

Sajith

வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என யாழ். மறை மாவட்ட ஆயர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், இன்று தன்னுடைய பிறந்த நாளையொட்டி யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதுடன் ஆயருடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

அதேவேளை ஆயர் இல்லத்தில் சஜித் பிரேமதாஸவின் பிறந்த நாளையொட்டி விசேட ஆசீர்வாத பூஜை மேற்கொள்ளப்பட்டது.

அதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்களான புத்திக பத்திரண, எரான் விக்ரமரட்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த யாழ். மறை மாவட்ட ஆயர்

“நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இன்று என்னைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அவர் தன்னாலான முயற்சியை மேற்கொண்டு அபிவிருத்தி வேலைகளைச் செய்து வருகின்றார். ஏற்கனவே எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் இவ்வாறு அபிவிருத்தி வேலைகளைச் செய்யவில்லை. ஆகவே அவருடைய அந்தப் பணியைப் பாராட்ட வேண்டும். எத்தனையோ வைத்தியசாலைகளுக்கு சிறுநீரக நோய்க்குரிய இயந்திரத் தொகுதிகளை வழங்கியுள்ளார். அத்தோடு பாடசாலைகளுக்கும் உதவிகள் வழங்கி வருகின்றார். சுகாதாரமும் கல்வியும் அவருடைய முக்கிய குறிக்கோள்களாகக் காணப்படுகின்றன.

அவ்வாறு ஈடுபடும் அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எங்களுடைய பிரச்சினைகள் அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கின்றது.

நான் மூன்று விடயங்களைக் குறிப்பாகக் குறிப்பிட்டேன். அதாவது கல்வி, மீன்பிடி, விவசாயம் என இந்த மூன்று துறைகளையும் வடக்கில் அபிவிருத்தி செய்ய வேண்டும். அத்தோடு வடக்கில் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினையாகக் காணப்படுகின்றது. அது உடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினேன். அதற்கு அவர் அரசில் இருப்பவர்கள்தான் அதனைச் செய்ய முடியும் என்று தெரிவித்தார்” – என்றார்.

செய்தியாளர் சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button