இலங்கைசெய்திகள்

குச்சவெளி இளைஞனின் மரணம் நீதிக்கு புறம்பானதா? இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்தது!!

Human Rights Commission

திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் தண்ணீருடன் கூடிய சேற்றுப்பகுதியில் இருந்து கடந்த 06.01.2022 அன்று சடலமாக மீட்கப்பட்ட குச்சவெளி நகர்ப்பகுதியைச் சேர்ந்த இளைஞரான ஜமீல் மிஸ்பரின் மரணம் தொடர்பிலும் குச்சவெளிப் பொலிசாருக்கு எதிராக பொதுசன ஊடகங்கள் வழியாக அவரது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயமானது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த இளைஞன் 05.01.2022 அன்று குச்சவெளிப் பொலிசாரினால் பேருந்தினை இடைமறித்து கைது செய்ய முற்பட்ட போதும் அவர் தப்பித்து காட்டுப்பகுதியினை நோக்கி ஓடியதாகவும் அவரை பொலிசார் கலைத்து சென்றதாகவும் பின் மறுநாள் காலையில் அவரது உடலம் நீருடனான சேற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது. 
குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் அவரது உறவினர்களால் பொலிசாரிற்கு எதிராக பரவாலான குற்றச்சாட்டுக்கள் ஊடகங்கள் வழியாக முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவின் திருகோணமலை அதிகாரிகள் குறித்த முஸ்லீம் இளைஞனின் உறவினர்களை அவர்களது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளதுடன் அவர்களின் நிலை பற்றியும் கேட்டறிந்துள்ளதாக தெரியவருகின்றது. 
இவ்விடயம் குறித்து திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளரான சட்டத்தரணி ஆர்.எல் வசந்தராஜா அவர்களை தொடர்புகொண்டு வினவியபோது குறித்த சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவின் திருகோணமலைப் பிராந்திய காரியாலயமானது விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் 1996 ஆம் ஆண்டின் 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவு 14 இற்கு அமைய தனது சொந்த பிரேரணை அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்படி விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உறுதிப்படுத்தினார். 
செய்தியாளர் கிஷோரன் 

Related Articles

Leave a Reply

Back to top button