இன்று கொழும்பு துறைமுக கிழக்கு முனைய கட்டுமாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்தப் பணிகளுக்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் 510 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது.
அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் 300 மில்லியன் டொலர் கடன் தொகையும் இந்த அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடுப்பகுதியளவில் முடிவுக்குக் கொண்டுவரக்கூடியதாக இருக்கும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை, முன்னதாக இந்தியாவுக்கு வழங்க யோசனை தெரிவிக்கப்பட்ட நிலையில், துறைமுக தொழிற்சங்கங்கள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டமையால், அந்த யோசனையை அரசாங்கம் கைவிட்டது.
பின்னர், கிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகள் துறைமுக அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டதுடன், கொழும்பு துறைமுக மேற்கு முனைய கட்டுமானப் பணிகளை இந்தியாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.