முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , 20ஆம் திருத்தச்சட்டத்தை உடனடியாக நீக்கி 19ஆம் திருத்தச்சட்டத்தில் உள்ள குறைப்பாடுகள் திருத்தப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாத்தளை மாவட்ட அமைப்பாளர் கூட்டத்தில் இன்று கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சி காலத்தில் 1978ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல், நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் முன்னெடுத்த தவறான வேலைத்திட்டங்கள் காரணமாகவே நாடு வீணடைந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாட்டில் இன்று வறுமை நிலை, துக்க நிலை, உணவு பொருட்களுக்கான தட்டுப்பாடு, பால்மாவுக்கான தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு என்பன ஏற்பட்டுள்ளன.
வைத்தியசாலைகளில் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றது.
இந்த அனைத்திற்கும் டொலர் பற்றாக்குறையே காரணமாக உள்ளது.
யார்? டொலரை வீணடித்தது.
பண்டாரநாயக்க அம்மையாரின் ஆட்சி காலம் தொடர்பில் தெரியாதவர்கள், அவரது ஆட்சி காலத்தில் மக்கள் உணவின்றி இருந்ததாக கூறுகின்றனர்.
அது தவறான பொருளாதார கொள்கை என கூறுகின்றனர்.
ஆனால் நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்திலேயே நாட்டில் சிறந்த அரசாங்கம் காணப்பட்டது.
அந்த காலப்பகுதியில் உணவு தட்டுப்பாடு காணப்படவில்லை.
அதேபோன்று நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் டொலர் பற்றாக்குறை ஏற்படப் போகின்றது என்ற, எதிர்காலத்தை நான் அறிந்திருந்தேன்.
எனினும் எமது அரசாங்கத்தில் காணப்பட்ட பிரிவினை உங்களுக்கு தெரியும்.
ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினர் எனது தீர்மானங்களுக்கு முரணாக அவர்களுக்கு தேவையான தீர்மானங்களை மேற்கொண்டனர்.
எனது அரசாங்கத்தில் தனியாக ஒரு அரசாங்கத்தை உருவாக்கினர்.
எமது நல்லாட்சி அரசாங்கத்தை வீணடிப்பதற்கு பொதுஜன பெரமுனவின் அப்போதைய தலைவர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.
இரண்டு தரப்பினரும் இணைந்தே எம்மை தாக்கினர்.
அதுமாத்திரமின்றி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த 12 அமைச்சர்களில் சிலரை தவிர ஏனையோர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டனர்.
இவ்வாறான முறைகேடுகள் மற்றும் மோசடிகள் இல்லாத அரசாங்கமே நாட்டுக்கு அவசியமாகவுள்ளது.
இன்று யார் என்ன கூறினாலும் எதிர்வரும் காலத்தில் தனி ஒரு கட்சியினால் நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது.
கூட்டு அரசாங்கமே, உருவாகும்.
நாம் அதற்கு தயாராக இருப்பதோடு எதிர்காலத்தில் வரும் கூட்டு அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தயாராகின்றது.
நாட்டில் சில கட்சிகளின் அரசியல்வாதிகள் இன்று வெற்றிபெற்று ஜனாதிபதியாகவும் மாறியுள்ளனர்.
இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியை தொடர்ந்து சர்வதேச தொடர்பை உரிய முறையில் பேணிய ஒரே அரசாங்கம் எனது அரசாங்கமாகும்.
ஒரு நாட்டின் தலைவர் மற்றும் அவர்களது கொள்கை அடிப்படையிலேயே உலக நாடுகள் உதவுகின்றன.
எமது ஆட்சி காலத்தில் 19ஆம் திருத்த சட்டத்தின் ஊடாக 18ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்பட்டமை காரணமாக உலக நாடுகள் எம்மை கவனித்தன.
எனவே, நாட்டை முன்கொண்டு செல்வதற்கு 20ஆம் திருத்த சட்டம் நீக்கப்பட வேண்டும்.
அதற்கு பதிலாக 19ஆம் திருத்தச்சட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகள் நீக்கப்பட்டு அது மீள கொண்டு வரப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.