இலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சந்தித்தபோது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது, 2021 ஆம் ஆண்டின் பேண்தகு அபிவிருத்தி அறிக்கையின்படி, இலங்கை மேலும் ஏழு புள்ளிகளைப் பெற்று, 165 நாடுகளில் 87ஆவது இடத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக இலங்கை முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது தெளிவுப்படுத்தியுள்ளார்.
காலநிலை மாற்றத்துக்கு நிலையான தீர்வுகளுடன் கூடிய பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதிச் செயலணி மற்றும் பொருளாதாரப் புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான செயலணி உள்ளிட்ட முறையான கட்டமைப்பு ஒன்று இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.