இலங்கைசெய்திகள்

யாரை விலத்திவிட்டும் வரைபை கையொப்பமிட்டு அனுப்புவோம் -வினோ எம்.பி!!

Vino MP

இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புவதற்காக ரெலோ எடுத்த முயற்சியில் இருந்து யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால் அது யாராக இருந்தாலும் அவர்களை விலத்திவைத்துவிட்டு அந்தவரைபை கையொப்பம் இட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம். என்று பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் ஊடகவியலாளர்கள் இன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அனைத்து கட்சிகளும் இணைந்து தயாரித்த வரைபை தமிழரசுக்கட்சி முற்றாக நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள்  இன்னும் ஓரிருநாட்கள் பிந்தினாலும் கூட இறுதிவரைபை தயாரித்து அனைவரும் கையொப்பம் இட்டு இந்தியப்பிரதமருக்கு அனுப்புவதாக உறுதிமொழி அளித்துள்ளார். 
எனவே இந்த விடயத்தில் யார் கையொப்பம் இடுவது, யாரை தவிர்ப்பது, யார் விலகிக்கொள்வார்கள் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும். ஆயினும் தமிழீழ விடுதலை இயக்கம் எடுத்த முயற்சியினை ஒருபோதும் கைவிடப்போவதில்லை. இந்த முயற்சியில் இருந்து யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால் அது யாராக இருந்தாலும் அவர்களை விலத்திவைத்துவிட்டு இந்த வரைபை கையொப்பம் இட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம். 
வார்த்தை பிரயோகங்களை சாட்டாகவைத்துக்கொண்டு தமிழரசுக்கட்சி ரெலோ எடுத்த முடிவிற்குப்பின்னால் நாங்கள்  செல்வதா என்ற சிறுபிள்ளைத்தனமான அல்லது தமிழ்மக்களை ஏமாற்ற நினைக்கின்ற இந்த செயற்பாட்டினை எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. 
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவுதான் 13 வது திருத்தம். ஆகவே ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டு அதுவேறு இதுவேறு, தலைப்பு வேறு, வார்த்தைபிரயோகங்கள் வேறு என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. 
இந்தியாவின் பங்களிப்பில்லாமல் எமது அரசியல் ரீதியான பிரச்சனைக்கு நிச்சயமாக நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை. அதை உணர்ந்து அனைத்து தமிழ்தேசியக்கட்சிகளும் செயற்படவேண்டும். அந்தவகையிலேயே இந்த முயற்சியினை எடுத்துள்ளோம் இது நிச்சயம் வெற்றிபெறும். 
இந்த விடயத்தில் எந்தவொரு ஆலோசனையும் இந்தியாவிடமிருந்து நாம் பெறவில்லை. இந்தியா எமக்கு எந்தவித அழுத்தங்களையும் வழங்கவில்லை. ஆனால் நாம் பாதிக்கப்பட்ட இனம் என்றவகையில் கடந்தகாலங்களில் அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு வழியிலோ எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள் என்ற ரீதியில், அவர்களால் கொண்டுவரப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் என்ற ரீதியில் அழுத்தங்கள் என்பதற்கு அப்பால் தமிழ்மக்களின் விடுதலைக்காக செய்கின்ற பெரிய கைங்கரியமாக இதனை பார்ப்பதாக தெரிவித்தார்.
செய்தியாளர் கிஷோரன் 

Related Articles

Leave a Reply

Back to top button