இலங்கைசெய்திகள்

வர்த்தகத் தொடர்பை மேலும் விரிவுபடுத்த பந்துல குழு பாகிஸ்தான் விஜயம்!!

bandula

பாகிஸ்தானுடனான வர்த்தக ரீதியான தொடர்புகளை மேலும் விரிவுபடுத்திக்கொள்ளும் நோக்கில் நாட்டிலுள்ள 40 – 50 வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன எதிர்வரும் 23ஆம் திகதி பாகிஸ்தானுக்குச் செல்லவுள்ளார்.

கராச்சி வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தின் கொன்சியூலர் நாயகம் ஜகத் அபேவர்ண இலங்கையைச் சேர்ந்த வர்த்தகத்துறைசார் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக வர்த்தகத்துறை அமைச்சரின் பாகிஸ்தானுக்கான விஜயம் தொடர்பில் உறுதிப்படுத்தியதுடன், இதன்போது சுற்றுலாத்துறை உள்ளடங்கலாகப் பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்படவிருப்பதாகவும் தெரிவித்தார்.

“இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அடிக்கடி விஜயம் செய்கின்ற இலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு பாகிஸ்தானிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்பில் பெருமளவுக்குத் தெரியவில்லை” என்று தனது உரையில் சுட்டிக்காட்டிய ஜகத் அபேவர்ண, இலங்கையிலிருந்து வருகைதரவுள்ள பிரதிநிதிகள் குழு பாகிஸ்தானிலுள்ள வர்த்தகத்துறைசார் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுகளை நடத்துவதற்கு கராச்சி வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் வாய்ப்பேற்படுத்தித் தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதுமாத்திரமன்றி இவ்வாறான பிரதிநிதிகள் குழுக்களின் பரஸ்பர விஜயத்தின் ஊடாகவே இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை மேலும் விரிவுபடுத்திக்கொள்ளமுடியும் என்று குறிப்பிட்ட அவர், எனவே வெகுவிரைவில் இவ்வாறான பிரதிநிதிகள் குழுவொன்றை பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், “மருந்துப்பொருட்கள் மற்றும் ஆடையுற்பத்திக் கைத்தொழிலைப் பொறுத்தமட்டில் பாகிஸ்தான் மிகவும் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருக்கின்றது. இலங்கையால் பெரும்பாலும் அனைத்து வகையான மருந்துப்பொருட்களும் ஆடை உற்பத்திகளும் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆகவே, அந்த உற்பத்திகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்குக் காணப்படுகின்றது” என்றும் கொன்சியூலர் நாயகம் ஜகத் அபேவர்ண சுட்டிக்காட்டினார். செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button