“நாட்டில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் சமகால பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சிறந்த முன்மொழிவுகளை வழங்கியுள்ளார். இதனைக் கவனத்தில் கொண்டு அரசு செயற்பட வேண்டும். ரணிலின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.”
- இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த காலத்தில் நிபுணர்களின் வழிகாட்டல்களை புறக்கணித்து தான்தோன்றித்தனமான தீர்மானங்களை அரசு எடுத்திருந்தமையின் பிரதிபலனைத்தான் நாட்டு மக்கள் இன்று எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. சேதனைப் பசளை பாவனை தொடர்பில் எவ்வித முன் ஏற்பாடுகளுமின்றி ஜனாதிபதி எடுத்திருந்த தீர்மானத்தால் ஒட்டுமொத்த நாடும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
அத்தியாவசியப் பொருட்கள் முதல் எந்தவொரு பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயிக்க முடியாத நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் ஒரு முக்கிய தரப்பாக எமது மலையக மக்களே உள்ளனர். 15ஆயிரத்துக்கும் குறைவான சம்பளத்தையே தோட்டங்களில் இவர்களால் பெற முடிகிறது. சமகாலத்தில் உள்ள வாழ்;க்கைச் செலவுக்கு இந்தச் சம்பளத்தை கொண்டு எவ்வாறு ஈடுகொடுக்க முடியும்?.
தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்லும் பட்சத்தில் மலையக மக்கள் வீதிக்கு இறங்கும் நிலை ஏற்படும். பெருந்தோட்டங்கள் முழுவதும் கூட்டுறவு சங்கங்களை விரிவுப்படுத்தி மானிய முறையில் பொருட்களை பெற்றுக்கொடுக்கும் முறைமையொன்று உடனடியாக தயாரிக்கப்பட வேண்டும். அதேபோன்று பெருந்தோட்டப் பகுதிகளில் சதொச கிளைகளும் உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் மிகவும் வருமானம் குறைந்த தரப்பாக தோட்டத் தொழிலாளர்கள் இருப்பதால் இதுகுறித்து அமைச்சரவையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டும் முக்கிய முடிவுகளை அரசு எடுக்க வேண்டும்” – என்றார். செய்தியாளர் – சுடர்