“முடியாவிட்டால் உடனடியாக வீட்டுக்கு செல்லுங்கள். நாட்டைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.”
- இவ்வாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.வேலுகுமார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் ஊழல், மோசடிகளும், தவறான முடிவுகளும், தெளிவற்ற கொள்கைகளுமே பிரதான காரணங்களாகும். ஜனவரியில் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும்.
நாட்டு நிலைமை இவ்வாறிருக்க, அமைச்சர்கள் ‘அறிக்கைகளை’ வெளியிட்டு அரசியல் நடத்திவருவதுடன், உறுதியான அறிவிப்புகள் இன்றி ஊகங்களை வெளியிட்டு வருகின்றனர். சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றனர்.
இந்த நாட்டை பட்டினியை நோக்கி கொண்டு செல்லாதீர்கள் என அரசிடம் வலியுறுத்திக்கூறிக்கொள்கின்றோம். முடியாவிட்டால் வீட்டுக்கு செல்லுங்கள். நாட்டை பொறுப்பேற்று நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது. அதற்கான கொள்கைத் திட்டங்கள் எம் வசம் உள்ளன” – என்றார்.
செய்தியாளர் – சுடர்