மனோவையும் ஹக்கீமையும் சர்வதேசமே இயக்குகின்றது! – விமல்!!
vimal veeravansa
“மனோ கணேசன், ஹக்கீம் போன்றவர்கள் இணைந்து 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் பின்னணியில் சர்வதேச நிகழ்ச்சி நிரலே இருக்க முடியும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஏனைய நாடுகளும் தமது அரசியல் பொதிகளைத் திணிக்க நினைக்கின்றன.”
- இவ்வாறு கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“நாடு இன்று பாரிய நெருக்கடி நிலைமைகளை எதிர்கொண்டுள்ளதுடன் சில இறுக்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தையோ ஏனைய நாடுகளையோ நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முயற்சிகளின்போதும் நாட்டின் பலவீனத்தைக் கருத்தில் கொண்டு தத்தமது நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த சர்வதேச சக்திகள் முயற்சிக்கின்றன.
13ஆவது திருத்தம் மீண்டும் பொது விவாதத்துக்கு வந்துள்ளது. மனோ கணேசன், ஹக்கீம் போன்றவர்கள் ஒன்றிணைந்து 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாட ஆரம்பித்திருக்கின்றனர்.
ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியம் சில நிபந்தனைகளை முன்வைக்கும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை சில நிபந்தனைகளை முன்வைக்கலாம். இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் தமது நிதியைப் பெற்றுக்கொள்ள சில நிபந்தனைகளை முன்வைக்கும். இது பலவீனமான நிலையில் இருக்கும் ஒரு நாட்டின் மீதான அழுத்தங்கள் என்றே நாம் கருதுகின்றோம்.
அரசு மிகவும் அவதானமாக தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது” – என்றார்.
செய்தியாளர் – சுடர்