வடகீழ் பருவப் பெயற்சி மழை மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஒய்ந்துள்ளது. எனினும் மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியிலுள்ள சிறிய குளங்கள் நிரம்பியுள்ள இந்நிலையில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும், தெரிவிக்கின்றனர்.
போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் கோவில்போரதீவு, பெரியபோரதீவு பெரியகுளம், வெல்லாவெளி, பொறுகாமம், அகிய இடங்களில் அமைந்துள்ள குளங்களில், முதலைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாகவும், இதனால் அப்பகுதியில் தமது வாழ்வாதாரமாக வளர்த்து வரும் ஆடு, மாடுகளையும், மிகவும் சூட்சுமமான முறையில் முதலைகள் பிடித்து வருவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
முதலைகள் வரட்சி காலத்தில் இவ்வாறு சிறிய குளங்களிலிருந்து மட்டக்களப்பு வாவிக்குச் செல்வதும், மழை காலங்களில் வாவியிலிருந்து மீண்டும் குளங்களுக்குள் வருவதுவும் வழக்கமாகக் கொண்டுன. இவ்வாறு குளங்களுக்கு வரும் முதலைகள் குளங்களில் நீர் அருந்தச் செல்லும், ஆடு, மாடு உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளையும், தாக்கி உண்டு வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றர்.
செய்தியாளர் – வ.சக்திவேல்