வட கொரிய அரசாங்கம், வட கொரிய மக்கள் 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக் கூடாது மற்றும் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
1994 ஆம் ஆண்டு முதல் 17 ஆண்டுகளாக வடகொரியாவை ஆட்சி செய்துவந்த கிம் ஜோங் இல் கடந்த 2011 டிசம்பர் 17 அன்று 69 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து, அவருடைய இளைய மகனான கிம் ஜொங் உன் ஜனாதிபதியாக பதவியேற்று தற்போது வரையில் ஆட்சிபுரிந்து வருகிறார்.
இவரது தலைமையில் வடகொரியா பல அணுஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. அது மட்டுமின்றி உலகில் பல நாடுகளுக்கு வடகொரியாவுடன் பனிப்போர் நிகழ்கிறது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதியான கிம் ஜோங் இல்லின் நினைவுத் தினத்தை முன்னிட்டு வடகொரிய நாட்டு மக்கள் இன்று முதல் எதிர்வரும் 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக் கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக்கூடாது என வடகொரிய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்களுக்கு துக்க தினம் கடைபிடிக்கப்படும். ஆனால் இது கிம் ஜோங் இல்லின் 10 ஆவது ஆண்டு நினைவுத் தினம் என்பதால் இம்முறை 11 நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.