32 அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு! – ராஜித சுட்டிக்காட்டு
இலங்கையில் 32 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும், விஷப் பாம்பு தீண்டினால் ஏற்றப்படும் ஊசி மருந்துகூட இல்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் 52 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றன என்று பாராளுமன்றத்தில் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தேன். அவற்றில் 32 வகையானவை அத்தியாவசிய மருந்துகளாகும். புதிய நிலைவரம் மோசமாக உள்ளது. தட்டுப்பாட்டு நிலைமை அதிகரித்துள்ளது. ஆனால், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை என அச மருந்தாக்கல் கூட்டுதாபனம் கூறுகின்றது. உண்மை நிலைவரம் மருந்து களஞ்சியப் பிரிவுக்கே தெரியும்.
குறிப்பாக விஷப் பாம்பு தீண்டினால், நோயாளி வைத்தியசாலைக்குக் கொண்டுவந்த உடனேயே அவரின் உயிரைப் பாதுகாப்பதற்கு ஏற்றப்படும் ‘என்டி வெனம்’ என்ற ஊசி மருந்துகூட இல்லை. எனவே, விஷப் பாம்பு தீண்டி வைத்தியசாலைக்கு சென்றால் உயிரிழக்க வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது.
உரப்பிரச்சினையால் விவசாயிகள் விவசாயம் செய்வதில்லை. வயல் நிலங்கள் காடாகியுள்ளது. தேயிலைத் தோட்டங்களும் காடாகியுள்ளன. எனவே, இனி பாம்பு தீண்டல்களும் அதிகரிக்கும். ஆனால், நாட்டில் அதற்கான மருந்து இல்லை டொலர் இல்லை என்கின்றனர். இந்நிலையில், அமைச்சர்கள் சுற்றுலா செல்கின்றனர்” – என்றார்.