காலத்திற்கு காலம் எங்காவது ஒரு இடத்தில் இந்து கடவுளின் சிலை தகர்ப்பு புத்தர்சிலை உடைப்பு இஸ்லாமிய பள்ளிவாசல்கள் சேதம் கிறிஸ்தவ தேவாலயங்கள் சிதைப்பு என்னும் மதவாதம் சம்பந்தமான சில விடயங்கள் சில விசமிகளால் நடாத்தப்பட்டே வருகின்றன.இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, அமைச்சர்களோ, அரசாங்கமோ சில நாட்கள் மட்டுமே கைது. கண்டனம் என அது பற்றி பேசுவர். பின்னர் அவ்விடயம் மறந்தேபோய்விடும். தப்பு செய்தவனுமில்லை தண்டித்தவனும் இல்லை தண்டிக்கப்பட்டவனும் இல்லை என்றாகிவிடும்.
கடந்தவாரம் ஒரு பத்திரிகையில் வாசித்த ‘கடலில் தூக்கியெறியப்பட்ட தேவமாதா சிலை’ என்னும் தலைப்பிலான செய்தியை இதில் உள்ளடக்குகிறேன். தொடருங்கள்….
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ஜின் பிரதேசத்தில் வீதியோரமாக அமைந்திருந்த வழிபாட்டு தேவமாதா சிலை களவாடப்பட்டிருந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை வேதனையுறச் செய்துள்ளது. இவ்விடயம் குறித்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எனினும் அருகிலுள்ள ஓடையில் மாதா சொரூபத்தின் பாகங்கள் மறுநாள் காலை மக்களால் மீட்கப்பட்டிருந்தன. குறித்த மாதா சொரூபமானது இனமதவேறுபாடின்றி அப்பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களாலும் வழிபடப்பட்ட ஒன்றாகும். இதே போன்றதொரு சம்பவம் இரு வாரங்களுக்கு முன்னரும் நடைபெற்றுள்ளது.
லிந்துலை பிரதேசத்தில் உள்ள நாகசேனை என்ற இடத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலும் இதேபோன்று தேவாலய திருச்சொரூபம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நாம் அறிந்த ஒன்றே. இச்சம்பவங்களின் பின்னால் உள்ள சூத்திரதாரிகளை அறிய பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தான்தோன்றித்தனமான அரசாங்கம் ,அலட்சியமான அராஜகமான அரசியல், கொரோனா தொற்று, இயற்கையின் சீற்றம், பொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு, பஞ்சம், பட்டினி, இவை போதாதென்று புதிதாக சமையலறைக்குள் குண்டுவெடிப்பு அதாவது பல இடங்களில் நிகழ்ந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு போன்றவற்றால் மக்களின் அன்றாட வாழ்க்கை வினாக்குறியாகிவிட்டது.
இத்துன்பங்களுக்கெல்லாம் தெய்வங்களின் சாபம்தான் காரணமோ என எண்ணத்தோன்றிவிட்டது.
மதவாதம் என்பது மனித உயிரை எடுக்குமளவிற்கு இருப்பது மனிதப்பண்பு அல்லவே. அண்மையில் பாகிஸ்தானில் பிரியந்த என்ற குடும்பஸ்தர் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதவாதத்தின் உச்சமேயன்றி வேறென்ன?
எனவே…”யாதும் ஊரே யாவரும் கேளீர்…” என்பது போல “எம்மதமும் நல்மதமே ” என்ற நற்சிந்தனையுடன் மனிதாபிமானம் கொண்ட மனிதர்களாக வாழ முயற்சிப்போம். தீது செய்யும் விசமிகளையும் அவற்றுக்கு உடந்தையான சூத்திரதாரிகளையும் இனங்கண்டு கடுமையான தண்டனைக்கு உட்படுத்துவதன் மூலமே இவ்வாறான குற்றச்செயல்களைத் தடுக்க முடியும். அனைவரும் நற்பிரஜைகளாக வாழ்ந்து நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம்.
எழுதியவர் – தேவா மாதவன்.