ஏறாவூர் பொதுச் சந்தையை “சிங்களச் சந்தை” என குறிப்பிட்டு ஆளுநர் கடிதம். விடயம் விவகாரமானதன் பின்னர் பொதுச் சந்தை என விளிப்பு.
ஏறாவூர் நகர சபைக்குரிய பொதுச் சந்தையை “சிங்களச் சந்தை” எனக் குறிப்பிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பெக்ஸ் கடிதம் அனுப்பிய விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கி எதிர்வினையாற்றியதன் விளைவாக நகர சபை பொதுச் சந்தை என ஆளுநர் மாற்றிக் கொண்டதாக ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ். நழிம் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபையின் 44வது சபை அமர்வு அச்சபையின் சபா மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை 30.11.2021 இடம்பெற்றது.
அங்கு சபை அமர்வுக்குத் தலைமை தாங்கி உரைநிகழ்த்திய தவிசாளர் மேலும் குறிப்பிட்டதாவது “ஏறாவூர் சிங்களச் சந்தை விடயமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கிழக்கு மாகாண ஆளுநர் கடந்த வெள்ளிக்கிழமை பெக்ஸ் மூலம் அழைப்புக் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
இந்த விடயத்தை நான் நகர சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பொழுது பூர்வீகமாக ஏறாவூர் நகர சபைக்குச் சொந்தமான பொதுச் சந்தையை ஏறாவூர் சிங்கள சந்தை என ஆளுநர் குறிப்பிட்டிருந்த விடயம் விவகாரமாகியது.
அதன் அடிப்படையில் உடனடியாக இந்த விடயம் சம்பந்தமாக ஆளுநருடன் தொடர்பு கொண்டு ஏறாவூர் பொதுச் சந்தையை நீங்கள் சிங்கள சந்தை எனக் குறிப்பிட்டது தவறு என்றும் அவ்வாறான தலைப்புடன் கூட்டப்படும் கூட்டத்திற்கு நாங்கள் சமுகமளிக்கமுடியாது என்ற விடயமும் ஏறாவூர் நகர சபையின் பொதுச் சந்தை விடயம் என்று அழைத்தால் மாத்திரமே நாங்கள் சமுகமளிப்போம் என்ற விடத்தையும் ஆளுநருக்கு உறுதிபடத் தெரிவித்தோம்.
அதன் பின்னர் ஆளுநர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஏறாவூர் நகர சபையின் பொதுச் சந்தை என்று தலைப்பிட்டு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
தனக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்தான் தான் அவ்வாறு சிங்கள சந்தை எனக் குறிப்பிட்டதேயல்லாமல் வேறெந்த உள்நோக்கமும் இல்லை என்றும் ஆளுநர் எம்மிடம் குறிப்பிட்டார்.
மேலும் இந்த ஏறாவூர் பொதுச் சந்தை விடயமாக ஆளுநரிடம் சில தவறான விடயங்களை முறைப்பாட்டாளர்களான சிங்கள வியாபாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள் என்ற விவரமும் தெரியவந்தது.
இந்த விடயத்தை நாங்கள் தெளிவுபடுத்தியதன் பின்னர் ஏறாவூர் நகரசபை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு செயற்பட்டுள்ளது என்பதை ஆளுநர் புரிந்து கொண்டார்.
ஏறாவூர் நகர சபையின் பொதுச் சந்தையில் சட்டவிரோதமாக அத்துமீறி உள்நுழைந்துள்ள மூன்று சிங்கள சமூகத்தவர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஏறாவூர் நகர சபையால் தொடரப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெறுமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார். எனினும் இது நகர சபை எடுக்கக் கூடிய தீர்மானம் என்று ஆளுநரிடம் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளோம்” என்றார்.