ஒரு பூவின் புலம்பல்……
பள்ளிக் காலங்களில் அதிக சுட்டித்தனம் கொண்டவள் நான். சுட்டித்தனத்தோடு புத்திசாலித்தனமும் இருந்ததால் ஆசான்களின் மன அரியணையில் நான் இளவரசி தான்.
பக்கத்து வகுப்பில் கேள்வி கேட்டால் எங்கள் வகுப்பில் இருந்தபடி நான் பதில் சொல்லிவிடுவேன். ஆசிரியர் அடிதத்தில்லை. அப்போதெல்லாம் எங்கள் ஆசான்கள்தான் எங்கள் நண்பர்களும்…அன்போடு பாசத்தை அளவளவாய் சேர்த்து கனிவோடு கண்டிப்பை ஒன்றாக்கி எம்மை வழிநடத்தியவர்கள்….
செம்பாட்டுப் புழுதியும் செம்மண்ணின் வாசனையும் பாத ஓங்களில் ஒட்டிக்கிடந்த அந்த நாட்களில் பள்ளிப் பொழுதுகள் எங்களுக்கு குதூகலமானவையே.
சற்றே பருமனான எனக்கு விளையாடுவதெல்லாம் ஆகாத ஒன்று. பள்ளியின் விளையாட்டுப்போட்டி காலங்களில் ஆக அணிநடை மட்டும்தான் என்னால் செய்யமுடிந்தது.
நடிப்பென்பது எனக்கு கைவந்த கலை. சின்ன வயதிலேயே தாளலயம் செய்வதிலும் நாடகம் நடிப்பதிலும் தனித்திறமை எனக்கிருந்தது. அன்பு காட்டுவதில் அகமகிழ்ந்திருந்தவள் நான்….
என் சின்னச்சின்ன வண்ணக் கனவுகளில் சிற்பியின் நளினமும் ஓவியனின் லாவகமும் இருந்தது என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
அதிகமான பாசத்தழுவல்களை நான் அனுபவித்ததில்லை. அதில் சற்றே கரைந்தாலும் பெரிதாக அலட்டிக்கொண்டதும் இல்லை. அப்பாவின் தங்கையர் சொல்வர் ‘எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளத் தெரிந்தவள்’ நான் என.
வாழ்வென்ற வண்ணச்சோலையில் ‘நான் வேண்டாத காட்டு மரமோ’ என பல தடவை எண்ணியதுண்டு. ஆனால் ‘பலருக்கு நிழல் கொடுத்துவிடவேண்டும்’ என்பது என்னுடைய குழந்தை முதலான தாகம்.
சின்ன வயதில் மனம் கனக்கும் போதெல்லாம் பனைமரங்களுடன் கதைத்துக்கொள்வேன். அது எனக்கு மிகப்பிடித்த பொழுதுபோக்கு. தம்பிமார் இன்றுவரை அதைச் சொல்லிக்காட்டி பகிடி செய்வதுண்டு.
என் உலகத்தில் நான் அதிகம் நேசித்தது புத்தகங்களைத் தான். அதன் ஆழஅகலங்களை ஆய்ந்து உணர்ந்து சிலாகித்திருக்கிறேன்.
வீட்டின் சின்ன நூலகத்தில் இருந்த நூல்கள்தான் என்னை அதிகம் வசப்படுத்தியது எனலாம். அதுவே பிற்காலத்தில் எனக்கு பக்குவத்தினையும் தந்தது. எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த வாசிகசாலையில் வைத்திருக்கும் அத்தனை பேப்பர்களையும் ஒன்றும் விடாமல் வாசித்துவிடுவேன். அது போதாதென்று சற்று தள்ளியிருக்கும் வாசிகசாலைக்குச் சென்று மாயாவி, பிளாஸ்கார்டன் கதைகளை ஆர்வமாய் வாசிப்பது உண்டு.
மூன்றாம் தரம் படிக்கும் போது சிறுவர்களுக்கான மகாபாரதத்தை விரும்பி வாசித்த நான் ஒன்பது வயதிலேயே நிலக்கிளி என்ற நாவலை வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். அதுதான் எனது முதலாவது நாவல் வாசிப்பு. பத்து வயதில் அர்த்தமுள்ள இந்து மதம் பத்து பாகங்களையும் கரைத்து குடித்துவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும்.
ஆரணி நீ மலைப்பாக பார்ப்பது புரிகிறது. இரு இன்னும் இருக்கிறது….. என்னைப்பற்றிய வண்ணங்கள்….
தொடரும்.