3 வாரங்களுக்கு சீமெந்து தட்டுப்பாடு தொடரும் – அரசாங்கம்
நாட்டில் தற்போது நிலவும் சீமெந்து தட்டுப்பாடு எதிர்வரும் 3 வாரங்களுக்கு தொடரும். 3 வாரங்களின் பின்னர் சந்தைக்கு தேவையான சீமெந்து தொகையை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளதாக கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
சீமெந்து மற்றும் சீனி இறக்குமதியாளர்களுடன் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டில் தற்போது சீமெந்து மற்றும் சீனி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிக விலைக்கு நுகர்வோருக்கு இவற்றை பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் 3 வாரங்களுக்குள் சந்தைக்கு தேவையான சீமெந்து மற்றும் சீனி என்பவற்றை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே சீமெந்து தட்டுப்பாடு எதிர்வரும் 3 வாரங்களுக்கு தொடரும். கடந்த தினங்களில் 230 – 240 ரூபா வரையில் சீனியின் விலை உயர்வடைந்தது. எவ்வாறிருப்பினும் நுகர்வோர் அதிகாரசபை என்ற ரீதியில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்துள்ளோம்.
எனவே கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சதொச என்பவற்றில் சிவப்பு மற்றும் வெள்ளை சீனி என்பவற்றை கட்டுப்பாட்டு விலையில் விநியோகிப்பதற்கு உகந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.