வீதி புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் பணிப்பு !
ஐ றோட் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட 17 வீதிகளின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பணிப்புரை விடுத்தார். வீதி புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று யாழ் மாநகர முதல்வர் தலைமையில் அண்மையில் (22) யாழ் மாநகர சபையில் நடைபெற்றது .
இதன்படி பிறவுண் வீதியினை நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னரும், ஏனைய வீதிகளை நவம்பர் மாத இறுதிக்குள்ளும் முடித்துத் தருவது என்று ஒப்பந்தகாரர்களினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. எனினும் வாய்க்கால் புனரமைப்பு, நீர் குழாய்கள் பதித்தல் உட்பட அனைத்து பணிகளும் முடிவுறுத்தப்பட்டு குறித்த வீதிகள் அனைத்தும் அடுத்த ஆண்டில் மாநகர சபையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட இணக்கம் காணப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஐ றோட் திட்ட அதிகாரிகள்,தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் திட்ட பணிப்பாளர் உட்பட்ட அதிகாரிகள், யாழ் மாநகர சபை பொறியியலாளர், வீதி புனரமைப்பு மற்றும் நீர் வழங்கல் பணிகளை மேற்கொண்டுவரும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் அகியோர் கலந்து கொண்டனர்.