செய்திகள்

ஐவின்ஸ் தமிழின் அரசியல் களம் நிகழ்வின் நேர்காணல்

dav

ஐவின்ஸ் தமிழ் இணையதளத்தில் அரசியல் களம் நேர்காணலுக்காக வருகை தந்திருந்தவர் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன். அவருடனான செவ்வி வாசகர்களான உங்களுக்காக …….

வணக்கம் கஜதீபன்….முதலில் நீங்கள் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்…..அதாவது மக்கள் யார்…எந்தக் கட்சி எனப் பிரித்தறிவதற்கு அது வசதியாக இருக்கும்…..

அனைவருக்கும் வணக்கம்…..நீங்கள் கேட்ட கேள்வியிலே மிக ஆழமான ஒரு விடயம் உள்ளது. ஒரு தேசிய இனமாக இருந்தாலும் நாங்கள் மிகவும் சிறிய இனமாக இருக்கின்றோம். ஆனால் எங்களுக்குள்ளே ஏராளமான கட்சிகள் ….ஏராளமானவர்கள் ஏதோ ஒருவித தேவைகளுக்காக அரசியலில் இருக்க கூடிய சூழல் இன்று காணப்படுகின்றது. தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், அதனுடைய இணை மக்கள் விடுதலை முன்னணி…. அதில் அங்கத்துவம் வகிக்கின்றேன். முன்னாள் மாகாணசபை உறுப்பினராக நான் இருந்திருக்கிறேன். தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடைய தலைமையில் இந்தச் செயற்பாடுகளில் இணைந்துள்ளேன்.

நீங்கள் தற்போது இணைந்திருக்கும் கட்சி அதாவது தற்போது இந்தக் கட்சியில் இணைந்து செயற்படுகின்றீர்கள் ..அப்படித்தானே?

நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இயங்குகின்றோம்…ஆனாலும் நாங்கள் ஒரு தனித்துவமான கட்சியாக இருந்தபடிதான் கூட்டாக வேலை செய்கின்றோம். எங்களைப் பொறுத்தவரைக்கும் தமிழ் பேசுகின்ற பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பாக எதிர்காலத்தில் உருவாக வேண்டும் என்கிற பெருவிருப்புடன் உள்ளோம். அதற்காக கடுமையாக உழைத்துக்கொண்டு வருகின்றோம்.

நல்லது…..இந்த இணைவு எதற்காக எனக்கூறமுடியுமா?

இன்று எல்லோரும் பேசக்கூடிய ஒரு விடயம்…நாங்கள் தேசிய இனம் என்பதை நான் ஒருபோதும் மறக்கவில்லை..ஆனால், மிகவும் எண்ணிக்கையில் குறைந்த அளவில் இருக்கக்கூடிய நாங்கள் ஏராளமான கட்சிகளை வைத்துக்கொண்டு எங்களுக்குள் பிரிவுகளை வைத்துக்கொண்டு தமிழ் மக்களின் பொதுப் பிரச்சினையை தீர்ப்பதற்கே ஒன்றுகூடமுடியாதவர்களாக உள்ள நிலைமையை மாற்றவேண்டும் என்ற நோக்கோடு அந்த அடிப்படையில் தான் ஒன்றிணைந்துள்ளோம்.

அரசியலில் இணைந்து பயணிப்பவர்களைத் தவிர சாதாரண மக்களுக்காக ஒரு மாகாணசபை உறுப்பினர் , அவருக்கு இருக்கக் கூடிய கடமைகள், பொறுப்புகள் , பணிகள் பற்றி சற்று தெளிவாக விளக்கமுடியுமா?

பொதுவாக மக்களால் தரப்படுகின்ற அந்தப் பதவி என்பது மிக உயர்ந்த ஒரு பதவி நிலையாகத்தான் இலங்கையைப் பொறுத்தவரைக்கும் உள்ளது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்திற்குள் பேசுகின்ற எந்த ஒரு விடயத்திற்கும் எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது என்றொரு சட்டம் உள்ளதைப் போல மாகாண சபை உறுப்பினருக்கும் பல வரப்பிரசாதங்கள் உள்ளது. அது அவருக்கானது அல்ல, அது மக்கள் சேவை செய்வதற்காக தரப்படுகின்ற சிறப்புரிமை. என்னைப் பொறுத்தவரைக்கும் இன்றைக்கு இருக்க கூடிய மாகாண கட்டமைப்பு, இலங்கையைப் பொறுத்தவரைக்கும் அதிகாரம் மிகக்குறைந்த ஒரு கட்டமைப்பாக உள்ளதெனினும் , மக்கள் எம்மை நம்பி அன்றாட பிரச்சினைகளை முறையிடுகின்ற போது அரச மேலதிகாரிகள், மாகாண சபைக்கு உட்பட்ட அலுவலர்கள் ஆகியோரை மக்களின் சார்பில் சந்தித்து பிரச்சினை பற்றி அணுகமுடிகிறது. அதுமட்டுமல்லாது மக்களின் வரிப்பணத்தில் ஒதுக்கப்படுகின்ற நிதி ஒதுக்கீட்டின் மூலம் மக்களுக்கான உட்கட்டுமான வசதிகளை முன்னெடுத்தல் போன்றவற்றை எம்மால் செய்யமுடிகின்றது.

அன்றாட மக்கள் பிரச்சினை எனக்குறிப்பிட்டிருந்தீர்கள்,… உதாரணமாக ஒன்றைக் கூறமுடியுமா?

சாதாரணமாகச் சொல்வதானால் …. அதுவும் எங்களுடைய பிரதேசங்களில் ஒரு எல்லைப்பிரச்சினை வருகிறது. அப்போது மக்கள் எங்களிடம்தான் வருகின்றார்கள். அது தொடர்பாக மாகாண சபை உறுப்பினராக உள்ள போது பிரதேசசபை தலைவர், கிராமசேவையாளர், கச்சேரியில் பதவி வகிக்கும் காணி தொடர்பான அதிகாரி போன்றவர்களை அணுகுவது இலகுவாக உள்ளது. சாதாரண படிவம் நிரப்புவதற்கு கூட எம்மை அணுகும் சந்தர்ப்பங்கள் கூட உள்ளன.

மாகாண சபை உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி ?

நான் பதவி வகித்த கடைசிக்கு முன்னைய ஆண்டுகளில் ஒரு மாகாண சபை உறுப்பினருக்கு 60 இலட்சம் வரையான திட்டங்களை முன்மொழிந்து செல்லலாம். இப்போது 1 கோடியே ஐம்பது இலட்சம் ரூபா முன்மொழிவுகளை வழங்க முடியும்.

மாகாண சபையில் ஒதுக்கப்பட்ட இந்த நிதி பயன்படுத்தப்பட்டதா?

நிச்சயமாக … சிலருக்கு தவறான ஒரு அபிப்பிராயம் இருந்துகொண்டே இருந்துள்ளது. நிதி ஒதுக்கீடுகளைப் பொறுத்தவரைக்கும் இந்த மாகாணத்தில் இருந்து மத்திய அரசாங்கத்தின் திறைசேரிக்கு திரும்பி போனதாக தகவல் இல்லை. ஆனால் ஒரு விடயம் உள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியானது உடனடியாக வந்து சேராது. நிதி விடுவிக்கப்படும் காலப்பகுதி குறிப்பிடப்பட்டதாகவே இருக்கும். அதன் காரணமாக சில பேரிடம் இப்படியான கருத்துகள் இருக்கலாம். இவ்விடயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். உதாரணமாக பாடசாலைக் கட்டுமானப் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்படுகின்றது என்றால் அதிபர்மார் பொறுப்பெடுத்துச் செய்துவிடுவார்கள்… அந்த நிதித்தாமதமானது அவர்களுக்கு சில நெருக்கடிகளை உண்டுபண்ணிவிடுவதைப் பார்க்கமுடிகிறது. மற்றபடி திரும்பிச் சென்றது என்பதில் எந்த உண்மையும் இல்லை.

மாகாண சபை கலைக்கப்பட்டபின்னர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியாக மாறுகின்றார்கள்..இது எப்படி? இதற்கான காரணம் என்ன?

இது இன்று நேற்றானது அல்ல….தமிழ் மக்களின் உரிமைக்காக ஆயுதம் தூக்கிய அண்ணன்மார்களே ஒவ்வொரு கட்சியாக இருந்துதான் போராடினார்கள். அதன் பின்னர்தான் எல்லோரும் ஒன்றுபட்டு இயன்றவரை இணைந்து செயற்பட முற்பட்டனர். எங்களைப் பொறுத்தவரைக்கும் எங்களுடைய இனத்தைப் பொறுத்த வரைக்கும் இது ஒரு பாரிய தாக்கத்தைத்தான் ஏற்படுத்துகின்றது.

நீங்கள் மாகாண சபையில் இருக்கும் வரைக்கும் மாகாண சபை வடக்கிலே இருந்தது. இந்த உடைவு எதற்காக…சொல்லுவதற்கான அதிகாரம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் சொல்லலாம்?

நீங்கள் கேட்பதை நான் இப்படி விளங்கிக் கொள்கின்றேன். முதலமைச்சருடனான முரண்பாடுகள், அதனால் முதலமைச்சர் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகியது, இவைகளெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான பின்னடைவுகளாக இருந்தது. கூட்டமைப்பிற்கான பின்னடைவு என்பதை விட தமிழ் தேசிய இனத்திற்கான பின்னடைவாக இருந்தது என்பதை நான் விளங்கிக்கொள்கின்றேன். அதில் உண்மையும் உள்ளது. திரு. விக்னேஸ்வரன் அவர்கள் பிரிந்து சென்று வேறு கட்சியை உருவாக்கியது, இன்னும் பலர் பிரிந்து சென்றமை போன்ற விடயங்கள் தமிழ் தேசிய இனத்தை பலவீனப்படுத்துகின்றது. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக மோசமாக பாதிப்படைந்தது, அது சரியா , தவறா என விவாதித்தால் நீண்ட நேரமாகும். இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் தேசிய இனத்தை மிகவும் பாதிப்படையச் செய்தது. உதாரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெறுகின்றார். இது மிகவும் மோசமான பின்னடைவு, இந்தப் பின்னடைவுகள் எல்லாவற்றிற்கும் எங்களுக்குளளே இருக்கக்கூடிய முரண்பாடுகள் காரணமாகும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அப்படி இருந்திருக்கக்கூடாது என்பதை உணர்ந்துகொள்வதுடன் இனிமேலும் இப்படி நடக்கக்கூடாது என்பதில் அதிகவனத்துடன் இருக்கவேண்டும் என்பதை நாம் விளங்கிக்கொள்கின்றோம்.

மாகாண சபை கலைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது மீண்டும் தேர்தல் நடைபெறலாம் என பேச்சுகள் உள்ளன. அப்படியிருக்க நீங்கள் மாகாணசபையில் அங்கம் வகித்த போதான மக்கள் பணி குறித்து கூறுங்கள்?

மாகாண சபை தேர்தல் தற்போது இந்த நாட்டில் நடைபெறும் என நான் நம்பவில்லை. ஏனென்றால் தற்போதுள்ள அரசாங்கம் மிகவும் மிகவும் பலவீனமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்த நாட்டில் எதிர்க்கட்சி பலமானதாக இல்லை. தற்போது எமது நாட்டில் எந்தப் பிரதேசத்திலுள்ள ஒரு நபரிடம் கேட்டாலும் அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட கதை இருக்கும். இங்கு வாழமுடியாடிதன்பதே பதிலாக இருக்கும். அதைப்பயன்படுத்தி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பமுடியாத நிலையில் தான் எதிர்க்கட்சி உள்ளது. அது ஒரு பக்கம் இருக்க , மாகாண சபை காலத்தில் நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த மாகாண சபை கட்டமைப்பும் மக்களுக்காக இன்னும் பல பணிகளை ஆற்றியிருக்க முடியும். செய்திருக்கலாம். வேறு சில பல காரணங்களால் அதனைச் செய்ய முடியாமல் போய்விட்டது. இதை இங்கே மட்டுமல்ல, வடக்குமாகாண சபையில் என்னுடைய விடைபெறுதல் நாளிலும் நான் கனத்த மனதோடு இதனைப் பகிர்ந்துகொண்டேன். வரப்போகின்ற புதியவர்கள் இதனை பாடமாக கொண்டு பணியாற்றவேண்டும் எனவும் கேட்டிருந்தேன். என்னுடைய தனிப்பட்ட ரீதியில் எனக்கான அதிகாரங்களுக்கு உட்பட்டு நான் சரியாகச் செய்திருக்கிறேன் என நினைக்கின்றேன். இனி மக்கள் தான் சொல்லவேண்டும்.

அந்த உரையைப் பற்றி சொன்னீர்கள், அந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டு நடப்பார்களா?

நடப்பார்களா எனக்கேட்டால் என்ன சொல்ல, நடப்பதற்கு அத்தனை பேரும் முயற்சிக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரை, தனிப்பட்ட ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் எங்களுடைய கட்சித் தலைமை ரீதியாகவும் நாங்கள் ஒன்றிணைந்து மக்களுக்குச் சேவை செய்யவே முயற்சிக்கிறோம். அதற்காக முயற்சித்து அனைவரும் ஒன்றிணைந்தால் நடப்பவை நல்லதாகவே நடக்கும்.

அண்மையில் சர்வகட்சி மகாநாடு ஒன்று அதாவது ஈருருளியைச் சின்னமாகக்கொண்ட ஒரு கட்சியினுடைய ஒரு மகாநாடு நடைபெற்றது. இந்த மகாநாட்டின் போது பெரும்பான்மையாக…பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி, அது முடிவுகளை எடுப்பதற்காக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் முடிவை எதிர்பார்த்திருப்பதாக அறிவித்தது. அது பற்றி?

ஒரு கட்சியின் மாநாட்டில் அதனுடைய கட்சித்தலைவர் அப்படித்தான் பேசவேண்டும். ஏனென்றால் தங்களுடைய கட்சி மிகவும் பலமானதாக இருப்பதாக தொண்டர்களுக்கு காட்டவேண்டிய ஒரு தேவை அவருக்கு இருக்கிறது. அண்மைக் காலமாக மிகவும் பலவீனமான ஒரு கட்டமைப்பாக அவருடைய கட்சி வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிற பொழுது இப்படியாக கூறி தொண்டர்களை மிகவும் சந்தோசப்படுத்துவதாகவே நான் பார்க்கின்றேன். இந்த அரசாங்கம் எதை விரும்புகிறதோ அதை முன்னின்று செய்பவர்களாக அவர்கள் இருக்கின்றனர். மிகக்குறிப்பாக 13வது சீர்திருத்தம், இலங்கை அரசியலமைப்பில் தமிழ் மக்கள் சார்பாக இருக்கக்கூடிய, அது மிகவும் அதிகாரம் குறைந்ததென்பது வேறு விடயம்…ஒரே ஒரு சரத்து, அந்த விடயமே. அந்த விடயத்தை எப்படியாவது தான் கொண்டு வருகின்ற புதிய அரசியலமைப்பில் இருந்து எடுத்துவிடவேண்டும் என்கிற முனைப்போடு அரசாங்கம் வேலை செய்துகொண்டிருக்கக்கூடிய நிலையில் அதுவும் குறிப்பாக இந்த நாட்டினுடைய நீதி அமைச்சர் அலி சப்ரி, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் போன்றவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கிறபோது அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிற மாதிரி இந்த அரசியல் அமைப்பில் இருக்கக்கூடிய 13 வது சீர்திருத்தத்தை எப்படியாவது …அதையும் எடுத்து விடுங்கள் ..என்பது போல..அந்த உபயம் கூட தமிழ் மக்களுக்கு கிடைக்கவிடக்கூடாது என்பது போல..ஏதேதோ காரணங்கள் சொல்கிறார்கள்….ஆனால் அடைவதற்கான வழிமுறைகளை ஒருவரும் சொன்னது கிடையாது…அதையும் எடுத்துவிடுங்கள் என்கிற கோசங்களோடு….மிகப்பாரியளவிலான நிதியை , வழங்களைப் பயன்படுத்தி நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டம் கூட தோல்வியில் முடிவடைந்தது…அதற்கு முன்னதாக அவருடைய கட்சி ஒரு செங்குத்துப்பிளவைச் சந்தித்திருக்கிறது. அந்தக் கட்சியினுடைய தேசிய அமைப்பாளர் அந்தக் கட்சியைவிட்டு வெளியே சென்று அதனுடைய பல்வேறான விடயங்களை ஒவ்வொன்றாக வெளியிலே
கொண்டுவந்து கொண்டிருக்கின்ற நிலைமையில் அந்தக்கட்சியைக் காப்பாற்ற வேண்டிய ஒரு பாரிய பொறுப்பு அதன் தலைவரென்ற ரீதியில் அவருக்கு உள்ளது. ஆனபடியால் அவருடைய அந்தக் கருத்து தொடர்பாக இதற்கு மேலதிகமாக நான் விளக்கங்களைச் சொல்லவேண்டியிருக்காதென நினைக்கின்றேன்.

நன்றி…நிறைவாக இப்போது இதனைப் பார்த்துக்கொண்டிருக்ககூடிய ..அதாவது உலகம் முழுவதும் பரந்து வாழுகின்ற தமிழ் மக்கள் உங்களுடைய நேர்காணலைப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்..அவர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

இன்று…கதைத்த விடயங்களில் அதிகமாக எமது ஒற்றுமையைப் பற்றியதாக இருந்தது. அதாவது கட்சிகளினுடைய ஒற்றுமை தொடர்பானது. என்னைப் பொறுத்தவரைக்கும் இனம் ஒன்றுபடுவதற்கு, இருக்கக்கூடிய கட்சிகள்…குறிப்பாக தமிழ் தேசியப் பரப்பில் இயங்கிக்கொண்டிருக்கக்கூடிய கட்சிகள் ஒன்றுசேர்ந்து ..மக்களுக்காக தனிப்பட்ட கோபதாபங்கள், விரோதங்கள்..பகைகளைவிட்டு எல்லோரும் ஒன்றுசேர்ந்து செயற்பட எல்லோரும் முயற்சிக்க வேண்டும். ஈழத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மட்டுல்ல..புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களும் முழு ஒத்துழைப்பு தர முன்வரவேண்டும் என அன்பாக கேட்டு இந்த நேர்காணலை நிறைவு செய்கிறேன்.

நேர்கண்டவர் – திரு. கியூ லோறன்ஸ் தெனாறன்ஸ்

Related Articles

Leave a Reply

Back to top button