பொதுமக்கள் வாக்காளராக பதிவு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் இன்று (22) இடம்பெற்றது.
இன்று காலை 7.30 மணியளவில் யாழ். மாவட்ட செயலக முன்றலில் இருந்தும், காலை 8மணியளவில் கொடிகாமம் பஸ் நிலைய முன்றலில் இருந்தும் ஆரம்பித்த விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பேரணி சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து பேரணி தென்மராட்சி கலாசார மண்டபம் வரை சென்று நிறைவடைந்தது.
பெப்ரவரி 1ம் திகதி வாக்காளர் தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் இன்றைய தினம் யாழ். மாவட்டத்தில் இந்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டது.
இப் பேரணியில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளிதரன், மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ்,பிரதேச செயலர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.