40 வயதில் , ‘உணவே மருந்து’ என்ற கருத்திற்கு ஏற்ப கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்கம் குறித்து ஆயுர்வேத மருத்துவர் பிரீத்தா நிலா தரும் ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்.
வேக வைத்து உணவு வகைகளாக இட்லி இடியாப்பம், ஆம்லெம்ட, கீரை சூப், வெஜிடபிள் சாலட், தயிர் பச்சடி ஆகியவற்றை காலையில் சாப்பிடலாம்.
உச்சி வெயிலில் உட்கொள்ளும் உணவு வகைகளில் நெய் சேர்த்து கொள்ளலாம். காய்கறிகள் கொண்ட அவியல், கூட்டு ஆகியவற்றுடன் சிக்கன் உணவு வகைகளையும் சாப்பிடலாம்.
இரவு 7 அல்லது 7.30 மணிக்குள் உணவை சாப்பிடுவது நல்லது. பின்னர் பசி எடுத்தால் பால் அல்லது கொய்யா போன்ற பழங்கள், அடை, சாலட் போன்றவற்றை சாப்பிடலாம்.
எப்போதும் நன்றாக பசி எடுத்த பின்னர் சாப்பிடுவதே சிறப்பு. சுவையாக உள்ளது என்பதற்காக அதிகமாகவோ, தேவையற்ற சிற்றுண்டிகளையோ சாப்பிடக்கூடாது.
குறிப்பிட்ட வயதுக்கு மேல் பலருக்கு கை மற்றும் காலில் வலி ஏற்பட்டு நடப்பதற்கே சிரமப்படுவார்கள். அதற்கு உடலில் கால்சியம் சத்து குறைவதே காரணம். அதனால் அன்றாட உணவில் தயிர், பால் பொருட்கள், கேழ்வரகு, எள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். கீரை, கேரட், நாட்டுக்கோழி இறைச்சி ஆகியவற்றை சாப்பிடலாம். உணவிற்கு பின்னர் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி, பாக்கு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.
காய்கறிகள், முட்டை, மீன், பருப்பு வகைகள், முழு தானியங்கள் ஆகிறயவற்றை வேக வைத்து உண்ண வேண்டும்.
கிரீம் வகைளை பயன்படுத்துவதை விட உணவில் பழங்களை சேர்த்து கொள்ளலாம். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதும் நல்லதே. உயிர்ச்சத்து நிறைந்த தேங்காய், பப்பாளி, தக்காளி, அன்னாசி, ஆரஞ்சி, போன்றவற்றை உண்பதால் சருமத்தில் பளபளப்பு ஏற்படும். தினமும் ஒருமுறை கிரீன் டீ அருந்தலாம்.
மாலை நேரங்களில் எள்ளுருண்டை, சுண்டல், கடலை உருண்டை, உளுந்து வடை ஆகியவற்றை சாப்பிடலாம். இரும்பு சத்து குறைபாட்டை அகற்ற தினமும் முருங்கை கீரை சாப்பிடலாம். செரிமான கோளாறுகளை போக்க முருங்கை இலை சூப் பருகலாம்.