இலங்கைசெய்திகள்

ராஜபக்ச குடும்பம் அடியோடு பதவி விலகவேண்டும் – மஹிந்தவின் அழைப்பிற்கு போராட்டகாரர்கள் பதில்

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர், யுவதிகளை பேச்சுவார்த்தைக்கு பிரதமர் மஹிந்தராஜ பக்ச அழைத்திருந்தார்.

இந்நிலையில், பிரதமரின் அழைப்பிற்கு காலிமுகத்திடலில் போராடிவருபவர்கள் உடன் பதிலை வழங்கியுள்ளனர். பிரதமருடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை. எமது கோரிக்கை என்ன என்பதை முழுநாடுமே அறியும். எனினும் பிரதமர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதால் மீண்டும் எமது கோரிக்கைகளை ஞாபகப்படுத்துகின்றோம்.

காலிமுகத்திடலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் வறுமாறு,

கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும். நாமல், பசில், சமல், சஷீந்திர, உட்பட ராஜபக்ச குடும்பம் அரசியலில் இருந்து விலக வேண்டும். அவர்களில் பின்னால் இருக்கும் குடும்ப மரமும் அரசியலில் இருந்து விலக வேண்டும். அதன் பின்னர் வெளிப்படையான கணக்காய்வில் சம்பாதித்த முறையை கண்டுபிடிக்க முடியாத சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும். அவரது தலைமையின் கீழ், பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, எரிசக்தி, போக்குவரத்து, கமத்தொழில், கைத்தொழில் போன்ற வரையறுக்கப்பட்ட துறைகள் அடங்கிய 10க்கும் மேற்படாத அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும். அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரை கொண்ட அமைச்சரவையாக இருக்கக் கூடாது.

புதிய அமைச்சரவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கடன் மறுசீரமைப்புக்கு செல்ல வேண்டும். சர்வதேசத்துடன் கொடுக்கல், வாங்கல்களை ஆரம்பித்து நம்பிக்கையான கடன் முகாமைத்துவத்தை ஆரம்பிக்க வேண்டும்.

குறைந்தபட்சமாக 15 வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தும் தேசிய  கொள்கையை உருவாக்க  வேண்டும் மற்றும் துறைகளுடன் உண்மையில் நேரடியாக  சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவைப் பெற வேண்டும். அத்துடன் தற்காலிக அரசாங்கம் அதனை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மீண்டும் ஒரு பைத்தியகாரனுக்கு இடம் கொடுக்காத வகையில் நிரந்தரமாக நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும். 20வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து, 19வது திருத்தச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு வரையறை விதிக்க வேண்டும். கட்சி மாறினாலும் வழக்குகளை திரும்ப பெறுவதை தடுக்க சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். சுயாதீனமான சட்டமா அதிபர் பதவியை உருவாக்க வேண்டும்.

இவ் கோரிக்கைகளைத் தவிர வேறு யோசனைகளுடன் பிரதமரை எவரும் சந்தித்தால், அவர்கள் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை உணருங்கள். இவற்றை தவிர கூற வேறுஎதுவுமில்லை. இதனை நேரடியாக பிரதமரிடம் கூறுங்கள். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் தேவை இருக்காது என போராட்டகாரர்கள் கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button