முள்ளிவாய்க்கல் இனப்படுகொலை தினமான மே – 18ஐ முன்னிட்டு வடக்கு – கிழக்கில் இருந்து பேரணிகள் முள்ளிவாய்க்கலை சென்றடையவுள்ளன.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
“இன விடுதலையத் தேடி முள்ளிவாய்க்கலை நோக்கி” என்னும் தொணிப்பொருளில் இப்பேரணிகள் இடம்பெறவுள்ளன.
அவ்வகையில், கிழக்கு மாகாணத்தில் பேரணி இன்று (15) ஆரம்பமாகின்றது. பொத்துவிலில் ஆரம்பிக்கும் பேரணி திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, களுவாஞ்சிக்குடி ஊடாக திருகோணமலையைச் சென்றடைந்து, அங்கிருந்து 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலை சென்றடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பேரணி நாளை (16) ஆரம்பிக்கப்படுகின்றது. வல்வெட்டித்துறையில் ஆரம்பிக்கும் பேரணி, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, பரந்தன், பூநகரி, வெள்ளாங்குளம், மாங்குளம் ஊடாக 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பேரணியில், பொதுமக்கள், அரசியல் வாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக அமைப்புக்கள் மற்றும் சமயகுருமார்கள் எனப்பலரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.