அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசமைப்பில் முதன்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதைத் தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக ஏற்கமுடியாது. இதைத் தீர்வுக்கான முதல் படியாக வைத்துக்கொண்டு நாங்கள் முன்னோக்கி நகர்ந்து வருகின்றோம்.
இந்நிலையில், 13ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமானது. இப்படியான செயற்பாடு, இருப்பதையும் இழப்பதற்குச் சமமானது. அதனால்தான் 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி வருகின்றோம்.
13ஆவது திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வோர் தமிழ் மக்களின் நன்மை கருதிச் செயற்பட வேண்டும். தமது சுயலாப அரசியலுக்காகத் தமிழ் மக்களை நட்டாற்றில் விடும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது” – என்றார்.