கனவொன்று வந்து
என்னை தட்டியெழுப்பியதால்
பழைய நாட்குறிப்பேட்டை புரட்டுகிறேன்
நான் உன்னால் சிரித்த நாட்களையும்
உனக்காக அழுத நாட்களையும்
ஆதுரமாக மெல்லத்தட்டி
நினைவூட்டிச் செல்கிறது மையிட்ட எழுத்துக்கள்
செதில் செதில்களாக எனது அன்பை
நீ உதிர்த்திப்போன தருணங்களில்
தந்தி அறுந்த வீணையாக
நான் கதறித் துடித்ததுண்டு
மாமழை ஒன்றுக்குள் அகப்பட்ட
காகிதக்கப்பலைப்போல
மீள வழிதெரியாது தவித்த போதும்
செவ்வானத்து நட்சத்திரங்களுக்குள்
உந்தன் முகத்தினை
அன்று தேடிக்கொண்டிருந்தேன்
ஆனால் நீயோ பூவை நீக்கி
வேரில் வாசம் தேடிச் சென்று கொண்டிருந்தாய்
சிபி மன்னனைப்போல
நீதி தவறாதவன் என்று
உன்னை எண்ணியதையும்
இயற்கையால் நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்
என்றெண்ணி மகிழ்ந்திருந்த பொழுதுகளையும்
நினைத்துப் பார்க்கிறேன்
உனக்குப் பிடித்த பருத்தி ஆடையைக்கூட
இப்போதெல்லாம் தொடுவதில்லை
நீ தந்த துரோக வலிகளிற்கு சமர்ப்பணமாக
நான் மீண்டும் துளிர்த்துவிட்டேன் என்று
கொண்டல் காற்றிடம்
தூதனுப்பக் காத்திருக்கிறேன்
நீ சென்ற முகவரி கூறாயோ..?
-பிரபாஅன்பு-