உக்ரைன் மீதான அழுத்தங்களுக்கு மத்தியில், கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது தொடர்பாக பிரித்தானியா ஆராய்ந்து வருகின்றது.
இந்த நடவடிக்கை ரஷ்யாவிற்குத் தெளிவானதொரு செய்தியை அனுப்பும் எனப் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரித்தானியாவினதும் ரஷ்யாவினதும் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுச் செயலாளர்கள் மொஸ்கோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவைத்து குறித்து கலந்துரையாடி வருகின்றனர்.
இதேநேரம் எதிர்வரும் நாட்களில் ரஷ்ய ஜனாதிபதியுடன் பிரித்தானியப் பிரதமர் தொலைப்பேசி ஊடாக கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்கும் ரஷ்யாவின் செயற்பாட்டை பிரித்தானியா சகித்துக் கொள்ளாது எனவும் நேட்டோ நட்பு நாடுகளுடன் பிரித்தானியா இணைந்து செயற்படும் எனவும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இத்தம் சிந்தும் மற்றும் அழிவு பாதையை ஜனாதிபதி புடின் தேர்வு செய்தால், அது ஐரோப்பாவிற்கு ஒரு சோகமாக இருக்கும் என்றும் தனது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்க உக்ரைன் சுதந்திரமாக இருக்க வேண்டும் எனவும் பிரித்தானியப் பிரதமர் குறிப்பிட்டார்.
ஆகவே அடுத்த வாரம் ஐரோப்பா முழுவதும் ஆயுதப் படைகளை நிலைநிறுத்துவதற்குத் தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் நேட்டோ நட்பு நாடுகளை தரை, கடல் மற்றும் ஆகாய வழியாக பாதுகாக்க தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.