கணேஷ் அரவிந்த்
இரவில் மின்னும் நட்சத்திரங்களைப் பார்க்கிறோம். அவைகளுக்கும் மனிதர்களைப் போல் பிறப்பு, முதுமை, இறப்பு உண்டு. நட்சத்திரங்களின் ஆயுட்காலத்தில் அவற்றின் நிறம் மாறுகிறது. பிரகாசம் மாறுகிறது. பரிமாணமும் மாறுகிறது. நட்சத்திரம் ஒன்றின் ஆயுட்காலம் பல நூறு கோடி ஆண்டு அளவிலுள்ளது.
நட்சத்திரங்கள் எப்படி பிறக்கின்றன? அதாவது அவை எப்படி உருவாகின்றன?
அண்டைவெளியில் நட்சத்திரங்களுக்கு இடையேயுள்ள இடத்தில் ஒன்றுமில்லை என்று தோன்றலாம். உண்மையில் அப்படியில்லை. நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையிலுள்ள காலியிடங்களில் வாயு, தூசு போன்ற பொருட்களும் மண்டிக் கிடக்கின்றன. இதனைத் தூசு முகில் என்று குறிப்பிடலாம்.
இவ்விதத் தூசு முகிலிலிருந்துதான் நட்சத்திரம் பிறக்கிறது. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இத்தூசு முகில் இப்பொருட்களின் இடையிலான ஈர்ப்புச் சக்தி காரணமாகச் சுருங்க ஆரம்பிக்கிறது. தூசு முகிலில் அடங்கிய பொருட்கள் மையத்தை நோக்கித் திரள ஆரம்பிக்கின்றன. அப்படி ஏற்படும் போது அத்திரளில் வெப்பம் அதிகரிக்கிறது. அக்குறிப்பிட்ட கட்டத்தில் வெப்பம் சுமார் 10 மில்லியன் டிகிரி செண்டிகிரேட்டை எட்டுகிறது.
ஆரம்பத் தூசு முகிலில் அடங்கிய வாயுவில் பெரும் பகுதி ஹைட்ரஜனே. எனவே, இம்மிகுந்த வெப்பத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் அணுச்சேர்க்கை (Nuculear Fusion) மூலம் ஹீலியமாக மாறுகின்றன. அப்போது பிரம்மாண்டமான சக்தியும் ஒளியும் வெளிப்பட ஆரம்பிக்கின்றன. இவ்விதமாக நட்சத்திரம் தோன்றுகிறது.
சூரியனில் அணுச்சேர்க்கை மூலம் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறுவதன் விளைவாகத்தான் சூரியனிடமிருந்து நாம் வெப்பத்தயும் ஒளியையும் பெறுகிறோம்.