முல்லைத்தீவைச் சேர்ந்த நதுநசியின் ‘தடம்தந்த வரிகள்’ கவிதைநூல், முத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் வே.முல்லைத்தீபன் தலைமையில் வெளியீடுசெய்யப்பட்டது. பிரதம விருந்தினராக வவுனியா தமிழ்ச்சங்கத்தின் நிறுவுனர் தமிழருவி த. சிவகுமாரன் அவர்கள் கலந்துகொண்டார். தமிழ்மொழிவாழ்த்தினை அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.து.றஜீதா இசைக்க வரவேற்புரையினை கவிஞர் கண்ணகிமைந்தன் நிகழ்த்தினார்.
தலைமையுரையினைத் தொடர்ந்து, பிரதம விருந்தினர் உரை நடைபெற்றது. ‘சமூகத்தில் மாந்தர்களும் அவர்தம் மனங்களும் எவ்வாறு இருக்கின்றன.. எவ்வாறு இருக்க வேண்டும்..? என்பதனை இலக்கியம் எதற்கு? என்னும் தலைப்பில், தனக்கேயுரிய ‘அவையீர்ப்புப் பாணியில்’ கருத்துரைத்தார் தமிழருவி. நூலின் நயவுரையினை அபிவிருத்தி உத்தியோகத்தர் இ. தர்மிதா நிகழ்த்தினார். பிரதம விருந்தினருக்கும் நூலாசிரியருக்கும் கௌரவங்களும் வழங்கப்பட்டன.
கருத்துரையினை அதிபர் சி.நாகேந்திரராசா வழங்கினார்.
‘அகமதி’ சஞ்சிகை அறிமுகம் நடைபெற்றது.நன்றியுரையுடன் கூடிய ஏற்புரையினை நூலாசிரியர் வழங்கினார். அண்ணளவாக அறுபத்தைந்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.