மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மன்னார் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பல வருட காலமாக இடம் பெற்று வரும் தென்பகுதியில் உள்ள வீட்டில் இருந்துகொண்டு சம்பளம் பெறும் மற்றும் மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவாக பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்படும் ஊழலை அண்மையில் எனது “மருத்துவ மாபியா” கட்டுரையில் அம்பலப்படுத்தியிருந்ததுடன் ஊறுபடும் நிலையில் உள்ள நோயாளிகளை குறிப்பாக இரவில் உடனடியாக வைத்தியர்கள் கவனிக்காவிட்டால் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்து இருந்தேன்.
இந்த கட்டுரை வெளியிட்டு சில தினங்களுக்குள் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்த வித சிகிச்சையுமின்றி இருந்ததனால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார். வழமை போல வைத்தியசாலைக் குறிப்புகளில் பொய்யாக உரிய சிகிச்சை இடம்பெற்றதாக குறிப்பிட்டு பின்னர் விசாரணை என்று சில குழுக்களை அமைத்து அனைத்தையும் முடிமறைக்கும் செயல்பாடுகள் இடம் பெறும் . இவை அனைத்தையும் GMOA மாபியா குழுவினர் மேற்பார்வை செய்து இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கடைசியில் குற்றமற்றவர்கள் என்று நிர்வாகத்தையும் மிரட்டி முடிக்கும். இந்த அவலத்துக்கு இந்த சந்தர்ப்பத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தக் கொடுமைகள் தொடரும்.
இதற்கிடையில் நிர்வாகமும் GMOA மாபியாவும் இணைந்து மக்களை ஏமாற்றும் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். ஸ்தாபன கோவையின் 31.5.2.பிரிவு (கீழ் இணைக்கப்பட்டுள்ளது ) மிகவும் தெளிவாக ஒரு அரசாங்க அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர் உடனடியாக பணி நீக்கம் (interdiction ) செய்யப்படவேண்டும் என்று கூறுகிறது. இதுவரை இந்த அனாவசிய உயிரிழப்புக்கு காரணமான வைத்தியசாலை ஊழியர்கள் எவரும் ஏன் பணி நீக்கம் செய்யப்படவில்லை? அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் அவர்களது பெயர்கள் ஏன் இன்னமும் வெளியிடப்படவில்லை ?
வைத்தியசாலைக்கு அப்பால் பட்ட வேறு அரசாங்க திணைக்களங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணையின் பின்பு குற்றமற்றவராக இருந்தால் மட்டுமே மீண்டும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுவார். ஆனால் இங்கே தெளிவாக ஒரு உயிரிழப்பு கவனக் குறைவு காரணமாக இடம் பெற்று இருக்கிறது. ஆனால் எவரும் பணி நீக்கம் செய்ய படவுமில்லை. அதே நேரம் பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் நீதியான விசாரணை இடம்பெறும் என்றும் அதன் பின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்ற தமது வழமையான பம்மாத்துக் கதைகளை GMOA மாபியா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலை நிர்வாகம் கூறி வருகிறது.
இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க மன்னாரில் உள்ள தமிழ் பேசும் மக்கள் முன்வர வேண்டும். குற்றவாளிகள் எந்த வித தாமதமும் இன்றி பணி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதை நீங்கள் செய்ய தவறினால் தொடர்ந்து கவனக் குறைவு காரணமாக பல உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி வரும்.
அதே வேளை இறந்த நோயாளியின் உறவினர்கள் தாமதம் இன்றி போலீஸ் நிலையத்தில் கவனக் குறைவால் இடம்பெற்ற இந்த இறப்பு தொடர்பாக உரிய முறைப்பாட்டை செய்ய வேண்டும். மன்னாரை சேர்ந்த சட்டத்தரணிகள் இலவசமாக இந்த அநியாயத்துக்கு எதிராக போராட முன்வரவேண்டும். நீதிமன்றின் ஊடாக 1. பொலிஸ் மூலம் குற்றச் செயலுக்கான வழக்கு மற்றும் 2. இறப்புக்கான நட்டஈடு கோரி சிவில் வழக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும்
ஒரு குற்றவாளி ஆவது முறையாக தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் தான் இந்த மருத்துவ மாபியா திருந்த வாய்ப்புள்ளது. அதைவிடுத்து பல கட்டுரைகள் விரிவுரைகள் சமூக ஊடக பதிவுகள் மூலமாக இவர்கள் திருந்தப் போவதில்லை மனம் வருத்தப் போவதும் இல்லை.
உடனடியாக மன்னாருக்கு நான் வரும் சூழ்நிலை காணப்படாத நிலையில் இது தொடர்பாக ஆலோசனை பெற விரும்புவோர் என்னுடன் 0779068868 தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முடியும்
நன்றி
Dr முரளி வல்லிபுரநாதன்
4.8.2024