செய்தியாளர் கிஷோரன்
வவுனியாவில் இடம்பெறவுள்ள அரச அதிபர் வெற்றி கிண்ண போட்டிகளுக்கு விளையாட்டுக்கழகங்களிடம் இருந்து நிதி விண்ணப்பத்துடன் கோரப்படுவதாக இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் உபபொருளாளர் ஆர். நாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா அரச அதிபர் வெற்றி கிண்ண போட்டிகள் வவுனியாவில் இடம்பெறவுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வவுனியா பிரதேச செயலகத்தால் உதவி பிரதேச செயலாளரின் கையொப்பத்துடன் கோரப்பட்டுள்ளதுடன் நிபந்தனைகளும் இணைக்கப்பட்டுள்ளது.
இதில் உதைபந்தாட்டம், துடுப்பாட்டம்இ வலைப்பந்தாட்டம்இ கரப்பந்தாட்டம் ஆகியவற்றிற்கு ஒவ்வொரு அணியும் 1000 ரூபாவும் பூப்பந்தாட்டத்திற்கு 500 ரூபாவும் கோரப்பட்டுள்ளது.
அரச திணைக்களமொன்று தமது திணைக்கள தலைவரின் பெயரில் நடத்தும் போட்டிக்கு பதிவு செய்யப்பட்ட கழகங்களிடம் இருந்து பணத்தை பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவ்வாறு போட்டியை நடத்துவதாக இருந்தால் அரச திணைக்களம் என்ற வகையில் தாமாக நிதி ஒதுக்கீட்டை செய்திருக்க வேண்டும் அதனை விடுத்து கழகங்களிடம் இருந்து அரச திணைக்களம் நிதியை கோருவது இலஞ்சமாகவே பார்க்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.