கட்டுரை

ரொமான்ஸ் என்பது பகிர்தல்!!

romance

அனுஷா நாராயண்

வெவ்வேறு லட்சியங்கள் கொண்ட இணையரைக் காணும்போதெல்லாம் எதிரெதிர்த் திசையில் செல்லும் இரண்டு ரயில் வண்டிகளே என் நினைவிற்கு வரும். நானும் என் கணவரும்கூட அப்படி இருந்திருக்கிறோம். 

இப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்பதெல்லாம் எப்போதேனும் ஒரு ரயில்  நிறுத்தத்தில் ஒரே நேரத்தில் சற்று நேரம் அருகருகே நின்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடின்ற தருணங்கள்தான். ஆச்சரியமாக, இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையும் மிக மகிழ்ச்சியானவே தோன்றுகிறது எனக்கு. 

தான் விரும்பும் துறையிலோ தொழிலிலோ தனக்கென ஒரு பெண் ஈட்டும் வெற்றியை, இந்தக் குடும்ப அமைப்பு அவளுக்கு என்று உருவாக்கிவைத்திருக்கிற அடிப்படையான வேலைகளைச் செய்வதால், ஒருபோதும் சமன்படுத்த முடிவதில்லை. 

குடும்பத்தில் ஒரு பெண் செய்கின்ற காரியங்களுக்கு என்று சிறப்பு அந்தஸ்து எப்போதுமே கிடையாது. நமது சமூகத்தைப் பொறுத்தவரை, அவையெல்லாம் அடிப்படையாகவும் இயல்பாகவும் அவள் செய்ய வேண்டிய கடமைகள். ஒரு பெண்ணை மிகவும் ஏமாற்றமடையவும் எரிச்சலடையவும் செய்பவை இவைதான் என எப்போதும் நான் உணர்ந்திருக்கிறேன்.

மீபத்தில் எனது அம்மாவும் அப்பாவும் என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அம்மாவினது மாத்திரைகளை எடுத்து வர மறந்துவிட்டிருந்தார்கள்.  அம்மா கேட்கிறார், “உங்களது மாத்திரைப் பெட்டிக்குப் பக்கத்தில்தானே என்னுடையதும் இருந்தது. எடுத்து வைத்திருக்கலாமே!” அதற்கு அப்பா சொல்கிறார், “நீ வேணா ஒரு அஸிஸ்டன்ட் போட்டுக்கோ உன் வேலைகளை செய்றதுக்கு!” இதேபோல அம்மாவும் சொல்லியிருந்தால் குடும்பம் என்னவாகி இருக்கும்! 

அதாவது, அப்பாவிற்கு அம்மா செய்யும் உதவிகளெல்லாம் அவளது கடமை. மாறாக, அம்மாவிற்கு அப்பா அவற்றைச் செய்ய வேண்டி வந்தால் அது ஒரு வேலையாளுடைய வேலைகள்!

சரி, நீங்கள் சொல்லலாம், இவையெல்லாம் போன தலைமுறைக் கதைகள் என்று. இருக்கலாம். சமகாலத் தம்பதிகள் இப்போதுதான் பிரக்ஞைப்பூர்வமாக முயன்று இவற்றை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். வீட்டிற்குப் பொறுப்பாக இருந்தபடியே பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள்; தங்கள் லட்சியங்களை நோக்கிச் சிறிய சிறிய அடிகளை எடுத்து வைக்கிறார்கள்; பணியாற்றும் துறையில் மிளிர்கிறார்கள். ஆண்கள் இவற்றுக்கு எல்லாம் உதவுகிறார்கள். ரொம்பவும் அழகாக இருக்கிறது இந்த மாற்றம். 

குழந்தை வளர்ப்பையே லட்சியமாகவும் குடும்ப மேலாண்மையையே ஒற்றைக் கடமையாகவும் கொள்வது பெண்களை ஒரு சுழலுக்குள் சிக்க வைத்துவிடுவதாக நான் எப்போதுமே கருதுவது உண்டு. அதன் பிறகு அவர்கள் அந்த மையத்தை நோக்கியே, அதன் மையமாக வாழும் எண்ணத்திலேயே தன் ஆற்றலையும் பொழுதுகளையும் கழிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அது குடும்பத்தில் உள்ள அனைவரையுமே ஒரு முடிவற்ற முள்சக்கர-சுழற்சிக்குள் நிறுத்திவிடுகிறது. 

இப்படி சமகாலத்தில் ரொம்பவும் பாதிக்கப்பட்டவர்களாக நான் கருதுவது, தற்காலத்திய மாமியார்களைத்தான்! அவர்கள் பெண்ணின் கடமைகளை அப்படியே செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்த மாமியார்களுக்கு மருமகள்களாக வாழ்ந்து துயருற்றவர்கள். தற்போதோ, பெண்ணின் எல்லை குடும்பம் மட்டுமே அல்ல எனக் கருதுகிற தலைமுறைப் பெண்களுக்கு அவர்கள் மாமியார்களாக  இருக்க வேண்டியதாகி இருக்கிறது! 

தான் ஒரு மருமகளாக நடந்துகொண்ட விதத்திற்கும், தற்போது தன் மருமகள் அக்கதாபாத்திரத்தில் வெளிப்படுத்துகிற பரிமாணங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. என்ன செய்வது! ஒரு மாற்றக்காலம் வரும்போது அங்கே சில தரப்புகள் பாதிக்கப்படத்தானே செய்வார்கள்! 

பிரதீப் பானர்ஜி என் அலுவலக நண்பன். அவன் சொன்னான், “நான் அவளிடம் பேசுவதே இல்லை என்பதுதான் என்னைப் பற்றிய அவளது முக்கியக் குறையாக இருக்கிறது. எனக்கோ என்ன பேசுவதென்றே தெரியவில்லை!” இத்தனைக்கும் அவள் காதல் மனைவி. திருமணமாகி சில ஆண்டுகள்தான் ஆகிறது!

ஒரு கணவரும் மனைவியும் பேசிக்கொள்ள இங்கே என்ன விஷயங்கள் இருக்கின்றன? குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் அதற்கான செயல்திட்டங்கள், குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களுடைய போக்குகள்… அப்புறம்? பிறகென்ன அவரவர் நண்பர்களுடன்  செல்பேசியில் ஆழ்ந்திட வேண்டியதுதானே! அதைத்தானே நாம் செய்கிறோம்! 

நான் கூறுகிறேன், இன்றைய தினம் எப்படிச் சென்றதென ஒருவருக்கொருவர் வினவிக்கொள்கிற குறைந்தபட்சப் பழக்கம் இருக்கிறவர்களுக்கு அந்த உறவு மிகப் பெரிய வாசல்களைத் திறந்துவைத்திருக்கிறது. என் வாழ்வில் மட்டுமல்லாது, பலரது வாழ்வில் இதை நான் கண்ணாரப் பார்த்திருக்கிறேன். 

எனது பெரியப்பா வங்கியில் பணிபுரிந்தார். பெரியம்மா வேலைக்கெல்லாம் செல்லவில்லை, ஐந்தாம் வகுப்போ என்னவோதான் படித்திருக்கிறார்.  ஆனாலும், ஒவ்வொரு நாளும் வேலை விட்டு வருகிற பெரியப்பா அன்று நடந்த விஷயங்களை எல்லாம் பெரியம்மாவிடம் பகிர்ந்துகொள்வார். அது எல்லாமும் பெரியம்மாவிற்குப் புரிந்துவிடும் என்று பொருள் இல்லை. நான் ஒருமுறை இதுபற்றிக் கேட்டதற்கு அவர் சொன்னார், “இதில் இரண்டு பலன்கள் உண்டு: நாங்கள் பேசிக்கொள்ள விஷயம் கிடைக்கிறது என்பது ஒன்று. அவளிடம் விவாதிக்கும்போது அலுவலகப் பிரச்சனைகள் சார்ந்து எனக்கே சில தீர்வுகள் மனதில் எழுகின்றன என்பது இரண்டாவது!”

விஷயம் இதோடு முடிந்துவிடுவது இல்லை. பெரியம்மாவின் அந்த நாள் எப்படிச் சென்றதென்பதையும் அவர் கேட்டுக்கொள்வார். அவரும் வாசித்த வார இதழ்களில் தான் ரசித்த மேலாண்மை பொன்னுச்சாமி கதைகளையோ, வேறு துணுக்குகளையோ எடுத்துக்கொடுத்து பெரியப்பாவை வாசிக்கச் சொல்வார். இது ரொம்பவும் ஆரோக்கியமான சூழலாக எனக்குத் தோன்றியிருக்கிறது.

இதன் பொருள் எல்லா நாளும் இதேபோல மகிழ்ச்சியான உரையாடல்களைக் கொண்டதாக இருக்கும் என்பதல்ல. பரஸ்பரப் பகிர்தலுக்கு இது மிக அடிப்படையான ஒரு முன்னெடுப்பு. 

னது கணவரும் நானும் எதிரெதிர் திசைகளில் பயணிக்கிற ரயில்களாய் இருந்திருக்கிறோம் எனச் சொன்னேன் இல்லையா? அவர் அப்போது தனது முனைவர் பட்ட ஆய்வுக்கான தயாரிப்புகளில் இருந்தார். நிஜமாகவே நிமிர்ந்து பார்க்கவும் நேரமில்லாத தினங்கள் இருந்திருக்கின்றன. அதே காலத்தில்தான் நானும் எனது நடனக்குழுவுடனான ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கான தயாரிப்புகளில் இருந்தேன். 

என்றாலும் ஒருவருக்கொருவர் மற்றவரின் பயணம் எப்படிச் சென்று கொண்டிருக்கிறதென அவ்வப்போது விசாரித்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறோம். தேவையான சிறு உதவிகளை ஒருவருக்கொருவர் தயங்காமல் கேட்டுப் பெற்றிருக்கிறோம். எல்லா சமயங்களிலுமே, கோரப்பட்ட அந்த உதவிகளை நிறைவேற்ற முடியாமல் போயிருப்பினும் வேறு ஏதெனும் வகையில் அது நிறைவடைந்ததா என்பதை உறுதிபடுத்திக்கொண்டிருக்கிறோம். 

இப்படியான விஷயங்கள் தொடர்ந்து குறைகிற தினங்களில் நான் அவரிடம் சொல்வது உண்டு, “பாருங்கள்! கணினியில் இந்த வேர்ட்ஃபைலை நான் மறந்தாற்போல் மூடும்போது, “இதுவரை செய்த மாற்றங்களை சேமிக்க விரும்புகிறீர்களா?” என்று அதுகூட என்னிடம் அக்கறையுடன் கேட்டுவிட்டு மூடுகிறது, இந்த அலைபேசியில் இருக்கும் அலாரம், “நாளை தீபாவளியாயிற்றே, உறங்குங்களேன். நான் சப்தமிடாமல் இருந்துகொள்ளட்டுமா?”என்று  கேட்கிறது. நீங்கள் என்னைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் நான் இவற்றையே கட்டிக்கொள்கிறேன்!” 

சின்னச்சின்ன ’ரொமான்ஸ்’கள்தான் நீண்ட கால ஓட்டத்தை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் ’ரொமான்ஸ்’  என்பதோ ’லவ்’ என்பதோ வெளிப்படையான விசாரிப்புகள் என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டியது இல்லை. ஆழ்மன அக்கறையின் வெளிப்பாடுகள். வார்த்தைகளாய் மட்டுமின்றி செயலாகவும் வடிவம் பெறுபவை அவை.

இரண்டு ஆண்களுக்கிடையே பேசிக்கொள்ள இருக்கும் விஷயங்களையும் இரண்டு பெண்களுக்கிடையே பேசிக்கொள்ள இருக்கும் விஷயங்களையும் ஒப்பிட, ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே பேசிக்கொள்ள இருக்கும் விஷயங்கள் மிக மிகக் குறைவுதான். ஆமாம், உண்மையைச் சொன்னால், அது அப்படித்தான்; வெறும் பத்து சதவிகிதம் என்றுகூடச் சொல்லிவிடலாம். குடும்பம் மட்டுமின்றி தொழிலும் இணைந்து செயல்படுகிறவர்கள் என்றால், இந்த சதவிகிதம் சற்றுக் கூடலாம். மற்றபடி உரையாடலுக்கான தளங்கள் குறைவு. 

நிதர்சனம் இப்படி இருக்கையில், என்ன காரணத்திற்காக மேற்சொன்னவாறு தினசரி விசாரிப்புகளும் அக்கறைகளும் தேவைப்படுகின்றன? அவ்வளவு சிரமப்பட்டு அந்த ஆண் – பெண் உறவினை பேணித்தான் தீரவேண்டுமா என ஒரு கேள்வி எழலாம். 

நீங்கள் அமெரிக்க எழுத்தாளர் மார்கரட் ஆட்வுட் எழுதிய ‘ஆரிக்ஸ் அண்ட் க்ரேய்க்’ (Oryx and Crake) நாவல் வாசித்திருக்கிறீர்களா? அது ஒரு அறிவியல் புனைக்கதை. பணத்தின் பொருட்டும் பசியின் பொருட்டும் உடல் வேட்கையின் பொருட்டும் உலகில் நடக்கும் குரூரமான சதிகளைக் கண்டு வெறுப்புறுகிற அறிவியலாளன் க்ரேக்  ஒரு மாத்திரையின் மூலம் உலகினை அழிக்கத் திட்டமிட்டு, செயல்படுத்துகிறான்.

இந்த மாத்திரையை உண்பவர்கள் – எந்த ஆண்டில் அதை உண்டாலும் – ஒரு குறிப்பிட்ட நாளில் உயிரிழந்துவிடுவார்கள். அவர்கள் உயிரிழக்க உயிரிழக்க அது காற்றில் பரவும் வியாதியாகி, மாத்திரையை உண்ணாதவர்களும்கூட உயிரிழக்கத் தொடங்குவார்கள். இவ்வகையில் மனித குலத்தை முற்றிலுமாக அழிக்கத் திட்டமிடும் அவன் இன்னொருபுறம் ஒரு புதிய வகை உயிரினங்களையும் உருவாக்கி வளர்த்தெடுப்பான். சூழல் மாசுபாடுகளை ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்ட அவ்வுயிரினங்கள் தம் கழிவுகளையே சுத்திகரித்து உண்ண முடிகிறவையாக, தெய்வம் என்கிற கோட்பாட்டினை நம்பாதவையாக, காமத்தின் பொருட்டு போட்டியிட்டுக் கொள்ளாதவையாக  வடிவமைக்கப்பட்டிருக்கும். 

முற்றிலும் தற்சார்புடையவையாக அந்த உயிர்கள் இருக்க வேண்டும் என்பதே அவனுடைய நோக்கமாக இருக்கும். அந்த உயிரினத்திற்கான பாதுகாவலனாக தன் நண்பன் ஸ்னோமேனை அவன்  நியமித்திருப்பான். இம்மாத்திரை மற்றும் அதன் விளைவுகளால் பாதிக்கப்படாமல் அவன் இருக்கும்படியாகவும் திட்டமிடப்பட்டிருக்கும். 

இப்படிப்பட்ட சூழலில் அந்தக் குறிப்பிட்ட தினத்தில் க்ரேக்  உள்ளிட்ட அனைவரும் ஒவ்வொருவராய் இறந்துகொண்டிருக்க, இப்புதிய உயிரினத்தின் இருப்பிடத்திலிருந்து சற்று வெளியே செல்லும் ஸ்னோமேன் மீண்டும் இருப்பிடம் திரும்பத் தாமதமாகிவிடும். அதற்குள்ளாகவே அந்த இருப்பிடத்திலிருக்கும் புதிய உயிரினங்கள் அவனைக் காணோமே எனத் தேடத்துவங்கி ஒன்றாய் இணைந்து அவனைப் போற்றி கோஷம் எழுப்பத் துவங்கியிருப்பார்கள்.  தலைவனது இடத்தை அவனுக்கு வழங்கியிருப்பார்கள், கிட்டத்தட்ட அவன் அவற்றுக்கு ஒரு கடவுள்போல் ஆகியிருப்பான். 

மனித வடிவில் ஒரு இயந்திரத்தையே வடிவமைத்தாலும் அது மனித இயல்புகளை வரித்துக்கொண்டுவிடும்போல என்ற எண்ணம் எனக்கு உண்டு. ‘எந்திரன்’ ரோபோ ஐஸ்வர்யாராயைக் காதலிப்பதில் எனக்கு ஆச்சரியம் இல்லை! 

குழு சேர்வதென்பதும், குடும்பமாக வாழ்வதென்பதும் அடிப்படையான மனித இயல்பு. 

ஆண் என்பதும் பெண் என்பதும் வெவ்வேறு அலகுகள் என்றாலும், ஏதேனும் ஒரு இடத்தில் ஒன்றையொன்று வெட்டிக்கொள்கின்ற கனங்கள்போலும் அவை.  ஒன்றிற்குள் ஒன்றாய் அழுந்தியும்விடாமல், முற்றிலுமாய் விலகிச் சென்றும் விடாமல், இணைந்திருக்கும்போதும் அழகிய பொருள் தருகிற வட்டங்களாய் அவை நிலைத்திருப்பதற்கு பகிர்தலே அடிப்படைக் காரணியாய் அமைய முடியும்.

ஒரு குடும்பத்தில் பகிர்தல் பல தளங்களைக் கொண்டது. பொருளாதாரப் பகிர்தல், வேலைப் பகிர்தல், உணர்வுப் பகிர்தல்… பொருளாதாரப் பகிர்தலும், வேலைகளைப் பகிர்தலும் இன்று பல குடும்பங்களுக்குள்ளும் வந்துவிட்டன.  

 உணர்வுப் பகிர்தலைத்தான் அடுத்ததாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. அதை நாம் தினசரி மாலையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்ளும் / சொல்லிக்கொள்ளும், “இன்றைய தினம் எப்படி இருந்தது?” என்றே ஆரம்பிக்கலாம்!

Related Articles

Leave a Reply

Back to top button