Uncategorized

பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது!!

சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்திற்கு உரித்தான, தாதியர், நிறைவுகாண், இடைநிலை வைத்தியர்கள் உட்பட 17 சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இன்றைய தினமும் தொடர்கின்றது.

வேதன பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி, நேற்று காலை 8 மணி முதல் சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தினர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றனர்.

வைத்தியர்கள் தவிர்ந்த, ஏனைய அனைத்து சுகாதார உத்தியோகத்தர்களும் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். கடந்த மாதம் 7ஆம் திகதி முதல், 9 நாட்களுக்கு சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டன.

இதன்போது, சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, மார்ச் மாதம் முதலாம் திகதிக்குள் தங்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து, சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பை கைவிட்டிருந்தனர்.

எனினும், தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க, சுகாதார அதிகாரிகள் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லையென சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சிறுவர் மற்றும் மகளிர் வைத்தியசாலைகள், புற்றுநோய், மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தடையின்றி சேவைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு, அங்கொடை மனநல மருத்துவமனை மற்றும் மத்திய குருதி வங்கி ஆகியற்றிலும் பணிப்புறக்கணிப்பு இடம்பெறமாட்டாது என சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்றைய தினம் வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிப்படைந்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button