கட்டுரை

தரவும் பெறவும் ஓர் உறவு -அனுஷா நாராயண்!

love

பக்கத்து வீட்டில் ஒரு முதிய தம்பதியர் இருக்கிறார்கள். மகன் வெளிநாட்டில், மகள் வெளிமாநிலத்தில். “பிள்ளைகளைப் படிக்க வைக்காமல் இருந்திருந்தாலாவது எங்களுக்கு அருகிலேயே இருந்திருப்பார்களே” என்று ஒருமுறை அந்த அம்மா புலம்பியது நினைவுக்கு வருகிறது.

தினசரி காய்கறி வாங்குவது முதல், மருத்துவப் பரிசோதனைகளுக்குச் செல்வதுவரை எல்லா வேலைகளையுமே தாங்களே செய்துகொள்ள வேண்டியிருப்பது மிகுந்த சிரமத்தைத் தந்தது அவர்களுக்கு. அது அவர்களது உடலை மேலும் நலியச் செய்துவிடுகிறது. “நீங்கள் இப்படித் தனியாக இருப்பதுதான் உங்களுக்கு நல்லது. எனது மனைவியுடன் இருந்தால் தினசரி பொழுது பிரச்சினையுடன்தான் விடியும்/முடியும்” என மகன் சொன்னதாகச் சொல்லும் அவர், அதிலுள்ள நியாயத்தையும் ஒப்புக்கொள்கிறார்.

என்றாலும், அவசரத்துக்கு ஓடிவர முடிகிற, பண்டிகை நாளில் எட்டிப்பார்க்க முடிகிற தொலைவிலேனும் பிள்ளைகள் இருந்தால் நல்லாயிருக்குமே என்று நினைக்கிறார். நியாயம்தானே! இப்போது அவர்களது ஒரே ஆறுதல், எப்போதேனும் வீடியோ காலில் வரும் பேரக்குழந்தைகள்தான்.

முதுமை சார்ந்த பிரச்சினைகள் தனி என்றால், இந்த நவீன யுகத்தில் ஒரே சமயத்தில் தனிமையை விரும்புகிறவர்களாகவும் அரவணைப்புக்காக ஏங்குகின்றவர்களாகவும் நாம் இருக்கிறோம் என்பது இன்னொரு பிரச்சினை. உணர்வுரீதியானத் தேவைகளை மட்டும் சொல்லவில்லை; உடல்நலப் பிரச்சினைகளும் இருக்கின்றன. ஏழை, பணக்காரர் எனும் வேறுபாடுகளின்றி நீரிழிவு, புற்று போன்ற எல்லா நோய்களும் பலருக்கு மத்திம வயதுகளிலேயே வந்துவிடுகின்றன. எதிர்பாராமல் ஏற்பட்டுவிடுகின்ற நோய்களும் விபத்துகளும் உறுப்பிழப்புவரை கொண்டுசென்றுவிடுகின்றன. பணம் செலவழித்து ஆள்வைத்துத் தன்னைப் பராமரித்துக்கொள்ள வசதியற்றவர்களுக்கு, அடிப்படைப் புகலிடமாக குடும்பமும் அதன் பிற உறுப்பினர்களுமே இருக்கின்றனர்.

இதே விஷயத்தை அப்படியே குழந்தைகளுக்கும் எழுத முடியும். பிரச்சினைகள்தான் வேறு. தாய் தந்தை இருவரும் வேலைக்குச் செல்வதனால், நாள் முழுவதும் வீட்டிற்குள் தனியாகப் பூட்டிவைத்துவிட்டுச் செல்லப்படுகிற குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. பால்யத்தில் எதிர்கொள்ள நேரிடுகிற பிரச்சினைகள் ஆறாத வடுவாக மனதில் படிந்துவிடுகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

எந்த வயதாக இருந்தாலும் சரி, அடிப்படையில் சார்ந்து வாழ ஓர் அமைப்பு மனிதர்களுக்குத் தேவைப்படுகின்றது. ஆனால் அந்த அமைப்பிற்குள் யாரும் யாரையும் சுரண்டாமல், சமத்துவமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் ஆண் – பெண் இருதரப்பினரது அடிப்படை எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஒருவர் மற்றவருக்கான சுதந்திரவெளியை அனுமதித்தும், ஒருவருக்கொருவர் நற்றுணையாக இருந்தும் வாழ முடிகிற வாழ்க்கையன்றி வேறெதைத்தான் நாம் நாடப்போகிறோம்!

தருவதாக மட்டுமே இல்லாமல் பெறுவதாகவும் ஓர் உறவு இருக்கும்போது, அங்கே தீர்ந்துபோகாத ஒரு சுனை கிளைக்கிறது. மதுரையைச் சேர்ந்த விழித்திறனற்ற ஓவியர் மனோகர் மற்றும் அவரது மனைவி மஹிமாவின் வாழ்க்கை காதலுக்குத் தருகிற வண்ணம் மிக உன்னதமானதாகத் தோன்றுகிறது. இருவருக்குமே ஒருவருக்கொருவர் தந்துகொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் அநேகம் இருந்ததே காரணம்.

ஒரு விபத்தில் ஏற்பட்ட தண்டுவட பாதிப்பினால் படுத்த படுக்கையான மஹிமாவும், விழித்திறனற்ற மனோகரும் ஒருவருக்கொருவர் உற்றதுணையாய் இருந்திருக்கின்றனர். திருமணம் என்பது உடலுறவுக்கானது மட்டுமல்ல, எந்த கணத்தில் வேண்டுமானாலும் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்படுகிற வாய்ப்புள்ள மனித விலங்கிற்கு அது ஒரு பாதுகாப்பு அமைப்பு எனத் தோன்றுகிறது.

உலகின் எந்த மூலையில் எந்தப் பெண்ணைக் கேட்டாலும், குடும்பம் என்பது அவளைச் சுரண்டுகிற விதத்தைப் பற்றி கசப்பான கதைகளை நிச்சயம் வைத்திருப்பாள். மீரா நாயரின், ‘லேடீஸ் கூபே’ என்னும் நாவலில், ரயிலின் மகளிர் பெட்டியில் சந்தித்துக்கொள்ள நேர்கிற ஆறு பெண்களுக்குமே விதவிதமான கதைகள் இருக்கின்றன. ஆனால், அவை அனைத்துமே அடிநாதத்தில் பெண் என்னும் காரணி வழியாக, அவர்களை ஒருவரோடொருவர் பிணைப்பவையாக இருக்கும். பெண்ணிற்குத் திருமணம் என்பதே தேவைதானா என்கிற கேள்வியை அடிப்படையாகக் கொண்டதுதான் அந்நாவல்.

ஒப்புக்கொள்கிறேன், ஆணுக்குமே குடும்பம் என்பது பெரும் சுமைதான். பெரும்பாலான குடும்பங்களில் பொருளாதாரம் சார்ந்த முதன்மைப் பொறுப்பு இன்னமும் அவனிடம்தான் இருக்கிறது. ஆனால், பின்காலனியத்துவ உலகில் அதிகாரப் படிநிலைகள் சிதைந்துவருகின்றன. தனிமனித உரிமைகள் முன்னிறுத்தப்படுகின்றன. அறிவியல் முன்னேற்றங்களும் அதற்குத் துணை நிற்கின்றன. இதன் விளைவாக குடும்பம் என்னும் அமைப்பும் சிதைய ஆரம்பிக்கிறது. விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருப்பதாகத் தரவுகள் சொல்கின்றன.

அடிப்படையாக, நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது. எந்த ஓர் அமைப்புமே, அதன் ஒவ்வோர் உறுப்பினரிடமிருந்தும் பொறுப்புகளையும் உழைப்பையும் எதிர்நோக்கக் கூடியது. குடும்பம் என்னும் அமைப்பும் அப்படியானதுதான். என்றாலும், அது தருகிற அழுத்தங்களையும் சிறைப்பிடித்தல்களையும் தாண்டி நாம் ஒவ்வொருவருமே மாலையில் கூடடைய விரும்பும் பறவைகளாகவே இருக்கின்றோம் என்பதுதான் உண்மை.

நான் எழுதுவதைப் பார்த்து பலரும் என்னைப் ‘பெண்ணியர்’ எனவும், இதனைப் ‘பெண்ணியம்’ என்றும் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தேன். சிரித்துக்கொண்டேன். உண்மையில் பெண்ணியம் என்பது நீண்ட வரலாற்றைக் கொண்டது.

ஒவ்வொரு தேசத்திலுமே இனத்தின் அடிப்படையிலும் வர்க்கத்தின் அடிப்படையிலும், அதற்கான தேவைகளும் அதன் படிநிலைகளும் வேறுபடுகின்றவை. பெண்ணியம் சார்ந்த களப் போராட்டங்கள் பலருடைய தியாகங்களை உள்ளடக்கியவை. வாக்குரிமைக்கான போராட்டங்கள் முதல் ‘மீ டூ’ இயக்கம் வரை அதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. எனவே நான் பெண்ணியர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை அடைந்திருப்பதாகக் கருதவில்லை.

இப்படிச் சொல்லும்போதே, உலகில் எல்லாப் பெண்களுமே ஏதோ ஒரு வகையில் பெண்ணியர்தான் என்றும் தோன்றுகிறது. ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், ‘பெண்ணியம்’ என்பதை வெவ்வேறாகப் புரிந்துகொள்கிறாள். வளர வளர அந்தப் புரிதல் மாறுகிறது. ஆண் என்றாலே எதிரி என நினைப்பது, தோற்றத்திலும் நடத்தையிலும் ஆணைப் போலவே மாறிவிட முயல்வது, இந்தப் பெண்ணுடலையும் அதன் பிரக்ஞைகளையும் உதற ஏங்குவது என்று ஆரம்பிக்கும் அது, சக பெண்ணின் துயரில் உடன் நிற்பது, பொருளாதாரச் சுதந்திரத்தில் நம்பிக்கை வைப்பது என்று மாறி, எல்லோரும் ஓர் நிறை எனும் இடத்தை வந்தடைவதாக அமைகிறது.

இத்தோடு என் பத்தியை நிறைவுசெய்துகொள்கிறேன்.

ஆணும் பெண்ணும் மாறி மாறி எழுதி உரையாடும் ‘இரு உலகங்கள்’ தொடர்ப் பத்தியின் முதல் பகுதியை எழுத எனக்குக் கிடைத்த வாய்ப்பு முக்கியமானது என்று நினைக்கிறேன். அடுத்த வாரத்தில் ஆண்களின் நியாயங்களையும் அடுத்தடுத்து வரும் வாரங்களில்ஆண் – பெண் இருவரது அனுபவங்கள், எதிர்பார்ப்புகளையும் வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.

தொடர்ந்து உரையாடுவோம். உரையாடல் அன்றி மனித உறவுகளைப் புரிந்துகொள்ள வேறு என்ன வழி இருக்கிறது?

Related Articles

Leave a Reply

Back to top button