கட்டுரை

சமந்தாவுக்கு ஏன் சைதன்யா தீர்ந்துபோனார்? – அனுஷா நாராயண்!!

artcle

கொல்கத்தா இப்போது எனக்குப் போதாது என்று தோன்றுகிறது. திருமணமாகி தமிழ்நாட்டிலிருந்து வந்தபோது இந்த ஊர் எனக்கு அந்நியமாகத் தெரிந்தது. நாளடைவில் இந்த ஊரிடம் நான் மெல்ல அறிமுகப்படுத்திக்கொண்டேன். கொல்கத்தா என்னிடம் அதன் பெண்தன்மையை அறிமுகப்படுத்திக்கொண்டது. காளி என்பது அதன் வடிவம்தான். கொல்கத்தாவின் வடிவம். ஊர்தான் காளி.  சுதந்திரமான, பரந்து விரிந்த, காதல் மிக்க காளி. இப்போது காளி எனக்கு முன் சுருங்கிவிட்டாள். கொல்கத்தாவே சின்னதாகிவிட்டதாகத் தெரிகிறது. வருஷம் எல்லாம் பெருக்கெடுத்து ஓடும் ஹுக்ளி நதி சிற்றோடைபோலத் தெரிகிறது. கொல்கத்தாவும் பெண்தான்; நான் அவளைவிட வேகமாக வளர்கிறேன்போல இருக்கிறது.

பெண் வளர்ந்துகொண்டே இருக்கிறாள். எல்லாவற்றையும்விட. அப்படித்தான் தோன்றுகிறது. அதனால் எல்லாம் சின்னதாகிவிடுகின்றன. சமந்தாவின் வலி மிகுந்த கடிதத்தைப் படித்தபோது, அதனால்தான் என் கணவரிடம் சொன்னேன், “சமந்தா வளர ஆரம்பித்துவிட்டாள்.” துரதிருஷ்டவசமாக, ஒரு பெண் வளரும்போது முதலில் ஆண்களே சிறுத்துப்போகிறார்கள். 

சமந்தா – நாக சைதன்யா மணமுறிவு என்னை மிகவும் பாதித்தது. நடிகர்கள், பிரபலங்கள் என்பது காரணம் இல்லை. இந்த மணமுறிவு வெகுவாகப் பேசப்பட்டது. சமந்தா வசைப்பாடப்பட்டார். இங்கே வங்காளிகளுக்கு அவரைப் பற்றி என்ன தெரியும்! அவர்கள்கூட பேசினார்கள். பெண்கள் சுதந்திரமாக எடுக்கும் எந்த முடிவும் இந்த நாட்டில் அப்படிப் பேசப்படும்.

சமந்தாவின் ட்விட்டைத் திரும்ப வாசிக்கிறேன். “விவாகரத்து என்பதே தன்னளவிலேயே ஒரு வலிமிக்க நிகழ்வு. அதோடு சேர்த்து, ‘நான் கருக்கலைப்பு செய்துகொண்டேன், வேறு தொடர்புகளில் இருந்தேன், குழந்தையே வேண்டாம் என்றேன், சந்தர்ப்பவாதியாக இருந்தேன்’ என்றெல்லாம் வதந்திகளைப் பரப்புவது இரக்கமற்றது. என்றாலும், இந்த வார்த்தைகளெல்லாம் என்னை துவண்டுவிடச்செய்ய நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்!”

எல்லா ஆண்களும் நாக சைதன்யா ஆகிவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களால் இதைத் தாங்க முடியவில்லை. இது என்றால், பிரிவை அல்ல; சமந்தாவின் முடிவை. ஏனென்றால், ஆண்களுக்கு ஒன்று தெரியும், பெண்கள் இறுதி முடிவு எடுக்காதவரை மணவுறவுக்கு ஆபத்தே இல்லை. அப்படியென்றால், அவர்கள் நல்லதாக ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளலாம், ‘ஏன் சமந்தாவுக்கு நாக சைதன்யா தீர்ந்துபோனார்?’

Ω

ரு ஆணிற்கும் பெண்ணிற்குமான – குறிப்பாக கணவன் மனைவி – உறவு எப்போது தீர்ந்துபோகிறது? அந்த உறவில் ஒரு பெண் என்ன எதிர்பார்க்கிறாள்? அதுவும் ஏழாண்டு காலம் காதலில் இருந்து பின் திருமணத்திற்குள் நுழைகிற ஒரு இணைக்கு நான்கே ஆண்டுகளில் அது ஏன் வறண்டுபோகிறது! எனில் அவளது தேர்வு தவறானதா?

எனக்குத் தெரியவில்லை. வாழ்நாள் முழுமைக்கும் ஒரு பெண்ணுக்கு முழுமை அளிக்கும் ‘தி பர்ஃபெக்ட் மேன்’ ஒருவனை அவளால் தேர்வுசெய்ய முடியுமா? அப்படி ஒருவன் இருக்கிறானா? அப்படி ஒருவன் தேவைதானா? 

இந்தியாவில் வாழ்விணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எல்லாப் பெண்களுக்கும் இல்லை. அந்த விஷயத்தில் சமந்தா கொஞ்சம் அதிர்ஷ்டசாலி. ஆனாலும், தன் வாழ்நாளுக்குமான ஓர் இணையைத் தேர்ந்தெடுப்பது எந்தப் பெண்ணுக்குமே அவ்வளவு எளிது இல்லை.

என் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் லேகாவிற்குப் பதினெட்டு வயதில் திருமணம் முடித்திருக்கிறார்கள். அவளிடம் கேட்டால், ‘இதுவே தாமதம், என் அக்காவுக்குப் பதினாறில் முடித்தார்கள்’ என்கிறாள். கணவன் தூரத்துச் சொந்தம். சின்ன வயதிலிருந்தே ஆண்கள் சகவாசம் இல்லாமல் வளர்ந்தவள். ‘ஆணுக்கும், பெண்ணுக்கும் என்ன வித்தியாசம் என்று புரிவதற்குள்ளேயே பத்து வருஷம் ஓடிவிட்டதக்கா’ என்பாள்.

சரி, என்னுடைய திருமணம் எப்படி நிகழ்ந்தது? நான் படித்திருந்தேன். வேலையிலுமிருந்தேன். இருபத்தைந்து வயதாகியிருந்தது. அதன் பிறகுதான் திருமணம் நிச்சயமானது. லேகாபோல ஆண்வாசம் தெரியாமல் வளர்ந்தவள் இல்லை நான். நண்பர்கள் இருந்தார்கள். வெவ்வேறு காலங்களில் சிலரோடு நேசம் இருந்தது. இப்போதும்கூட அது காதல் என்று சொல்லும் அளவுக்கு அன்று பக்குவப்படாமலேயே நான் அன்றைக்கு இருந்தேன். காதல் என்னும் பெயரில் ஓர் ஆணை அனுமதிக்கிற தைரியமே எனக்கு வாழ்வில் இல்லாமல் இருந்தது. ‘உனக்காக, உன் படிப்பிற்காக எங்கள் வாழ்க்கையையே பணயம் வைத்திருந்தோம்’ என்னும் பாவனையை எப்போதும் சூடிக்கொண்டு நடமாடுகிற பெற்றோருக்கு நான் திருப்பிச் செலுத்தும் பரிசாக என் வாழ்க்கைத் துணையைத்  தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்களுக்கு அளிப்பதில்தான் இருந்தது. இப்போது யோசித்துப்பார்த்தால், என்னிடமிருந்து அவர்கள் பரிசாக அதைப் பறித்துக்கொண்டார்கள் என்பது புரிகிறது.

ஒருவேளை, தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கே அளிக்கப்பட்டிருந்தால், இயல்பாக எனக்கே கிடைத்திருந்தால், நான் அந்த ‘மிகப் பொருத்தமான துணை’யைக் கண்டடைந்திருப்பேனா? அப்படி யாரையேனும் நான் சந்திந்திருக்கிறேனா?

Ω 

வீட்டைச் சுற்றிலும் விளைந்து கிடக்கும் காலிஃப்ளவர் செடிகளுக்கு எப்போதாவது மருந்தடிக்க வரும் பிரபா என் வாழ்வில் நுழைந்த முதல் ஆண். ‘மிகப் பொறுப்பானவன் – பண்பானவன்’ என அம்மா – அப்பா அடிக்கடி பேசிக்கொண்டபோது, அவரைப் போல ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அந்த பதினேழு வயதில் தோன்றியது. அவர் வருகின்ற தினங்களிலெல்லாம் மனம் கிளர்ந்தது நினைவுக்குவருகிறது. எப்போது பிரபா உள்ளே வந்தார், எப்போது வெளியே போனார்? பேசுவோம்.

கல்லூரியில் படிக்கும்போது, நடனம் என்னை ஆட்கொண்டிருந்தது. போட்டிகளுக்குச் செல்வது அப்போதைய சந்தோஷங்களில் ஒன்றாக இருந்தது. எல்லாவற்றிலும் தோல்விதான். மனம் சோர்ந்து கிடக்கும். ‘ஜஸ்ட் கிவ் யுவர் பெஸ்ட், அண்டு லீவ் த ரெஸ்ட்’ என்று சொன்னார் என்னுடைய பேராசிரியர் ஒருவர். அவர் எனக்கானவர் என்ற எண்ணம் சீக்கிரமே சூழ்ந்துகொண்டபோது எனக்கு வயது பத்தொன்பது. அதன் பிறகு போட்டிகளில் ஜெயிக்க ஆரம்பித்தேன்.  பரிசுடன் கல்லூரிக்குத் திரும்பும் ஒவ்வொரு முறையும் அவர் எந்த வகுப்பில் இருந்தாலும் வெளியே காத்திருந்து நின்று, அவர் கையில் கோப்பையை ஒப்படைத்து வாங்க ஏங்கி நின்றிருக்கிறேன். அவர் நினைவுடனேயே ஒவ்வொரு நாளும் கழிந்தது. எப்படி பேராசிரியர் உள்ளே வந்தார், எப்படி வெளியே போனார்? பேசுவோம்.

திருமணத்துக்குள் இப்படி உள்ளே வந்து சென்ற ஒவ்வொரு ஆணைப் பற்றியும், திருமணத்துக்குப் பின்னரும் வந்து செல்லும் ஆண்களைப் பற்றியும் பேசுவோம். அப்படி என்றால், நான் என்னவாக இருக்கிறேன் என்ற கற்பனைக்குள் பறக்காதீர்கள். நான் எல்லாப் பெண்களையும்போலவே இருக்கிறேன். அவர்களில் ஒருத்தியாகவே பேசுகிறேன். உங்களுக்கு ஒரு செய்தியை இங்கே சொல்லிவிடுவது நல்லது என்று நினைக்கிறேன். நான் பேசப்போவது, பெண்களைப் பற்றி இல்லை, ஆண்களைப் பற்றி. பெண்களின் உலகத்தில் அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி!

Ω

ன்னுடைய இருபதாவது வயதில் ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலை வாசித்தேன். எனது கனவு ஆண் என முழுமையாக ஒரு சித்திரத்தை எப்போதேனும் வரைந்து பார்த்திருக்கிறேனா என இப்போதும்கூட உறுதியாகத் தெரியவில்லை.  ஆனால், அப்போது எனது கனவுப் பெண் கல்யாணியாகத்தான் இருந்தாள். 

அந்த நாவலில் வரும் கல்யாணியும் ரங்காவும் ரசனையின் அடிப்படையில் ஏற்பட்ட ஈர்ப்பிலும் மரியாதையிலும்தான் மணம் முடிக்கிறார்கள். ஆனால், கல்யாணியின் ஆக்கிரமிப்பற்ற அன்பு, அவளது காதல் மீதே ரங்காவை சந்தேகம் கொள்ளச் செய்கிறது. ‘டூ யூ லவ் மீ?’ என்று அவன் அவளிடம் கேட்கிறான்.

தனது தனித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள விரும்புகிற ஒரு பெண்ணின் காதல் எதிர்கொள்ள நேர்கிற கேள்விகளையும் சூழல்களையும் கல்யாணி எதிர்கொண்ட விதம் என்னிடம் பெரிய யோசனைகளை உண்டுபண்ணியிருந்தது. என் அறைத் தோழியிடம் சொன்னேன், “கல்யாணம் என்பதே ஒரு தேவையற்ற பந்தம். உடலுறவுக்காக ஏற்றுக்கொள்கிற வாழ்நாள் சுமையாகவே அது இருக்கும் என்று தோன்றுகிறது.” 

பாலுறவோ, பாலியல் நாட்டமோ, பாலியல் தேர்வோ அவ்வளவு சாதாரணமான விஷயங்கள் இல்லை என்பதையும் அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை என்றாலும், இப்போதும் அன்றைய எண்ணத்தில் பெரிய மாற்றம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நாவலின் இறுதியில் கல்யாணிக்கு ஏற்படுகிற உடல் நலிவு, மீண்டும் இணைந்து வாழலாம் என அவர்கள் முடிவெடுக்கக் காரணமாய் அமைகிறது. அந்தக் காதலின் பொருட்டு நாடக நடிகையான அவளது காலை செயலிழக்கச்செய்ய வேண்டி வந்தது என முன்னுரையில் ஜெயகாந்தன் கூறுகிறார்.

இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இணைந்து வாழ விருப்பமில்லாமல், குடும்பத்தைவிட்டு வெளியேறுகிற நிமிஷாவின் கதையும் நினைவிற்கு வருகிறது. ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ மலையாளப் படத்தின் காட்சிகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடிந்தவர்களால்கூட அந்தப் படத்தின் முடிவினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது செயற்கையாய் இருப்பதாக என்னுடைய தோழிகளே பலரும் சொன்னார்கள்.

நான் என் கணவருடன் அந்தப் படத்தைப் பார்த்தேன். அவருக்கும் அதே கருத்துதான். “நீ என்ன நினைக்கிறே!” என்றார். “இதேபோல, குடும்பத்தைவிட்டு வெளியேறுகிற அந்த உடைதலும் விரக்தியும் எனக்கும்கூட ஏற்பட்டிருக்கிறது. எனக்கு மட்டும் இல்லை,  கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுக்குமே ஏற்படுகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அந்தத் தருணத்தை எப்படியோ கடந்துவிடுகிறோம். கழிவு நீரை தேநீர் டம்ளரில் பரிமாறுகிற அளவிற்கும் அதையே முகத்தில் வீசியடிக்கிற அளவிற்கும் நிமிஷாவிற்கு ஏற்படுகிற வெடிப்பில் எனக்கு எந்தச் செயற்கைத்தன்மையும் தெரியவில்லை.”

அவர் அதிர்ச்சியாக என்னைப் பார்த்தார். வெகுநேரம் அமைதியாக இருந்தார். மிகுந்த நல்ல மனிதர் அவர். இப்படி ஒரு கணவர் நல்ல மனிதராக இருப்பதற்கும், அப்படியும் அவர் மனைவிக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றுவதற்கும்கூட தொடர்பு இல்லை என்று சொன்னால், உங்களுக்கு அது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இது உண்மை.

ஒரு பெண் மணம் முடிக்கும்போது ஓர் ஆணை மட்டுமல்ல, ஒரு ஒட்டுமொத்த குடும்பத்தையும் அவர்களின் வாழ்முறையையும் பழக்கவழக்கங்களையும் சேர்த்தே மணம் முடிக்கிறாள். பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் அவற்றோடு ஒத்திசைய வேண்டிய சூழலுக்குள் நுழைகிறாள். உயிர் வாழவே முடியாத அளவிற்கு மூச்சு முட்டும்போது அவள் அங்கிருந்து வெளியேற முனைகிறாள். எந்தப் பெண்ணுக்கு எந்த சொல் / சைகை / பழக்கம் அந்த மூச்சுமுட்டலை எந்த நொடியில் ஏற்படுத்தும் என்பதை அவளாலேயேகூட முன்கூட்டி அறிந்திருக்க முடிவதில்லை.

Ω 

தின் வயதுகளில் எனக்கு காதலில் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. அதை எண்ணுவதே சாகசமாக இருந்தது. எனக்கும் ‘ஒரு கனவு ஆண்’ வேண்டும் என்று இருந்தது. யார் யாரோ சேர்ந்து தூவும் வண்ணங்களால் இந்தக் கனவு ஆணை அவள் வரைகிறாள். பெற்றோர் உண்டாக்கும் மதிப்பீடுகள், தோழிகள் சொல்லும் கதைகள், நாவல்களும் சினிமாக்களும் உண்டாக்கும் கற்பனைகள் எல்லாமும் சேர்ந்தே இந்தக் கனவு ஆண் உருவாகிறான்.

இப்போது யோசித்தால் எவ்வளவு அபத்தமாக இருக்கிறது! ஒரு பெண்ணின் கனவு ஆண்கூட இப்படி வெளியாட்களால்தான் இங்கே உருவாக்கப்பட வேண்டுமா? ஆமாம், அப்படித்தான் நடக்கிறது. அவளால் காதலிக்கப்பட்டவனாகவும்கூட இருக்கலாம்; அவளது தேர்வை அவளது உள்ளார்ந்த மதிப்பீடுகளால்தான் அவள் தேர்ந்தெடுத்தாள் என்று முழுமையாகச் சொல்லிவிட முடிவதில்லை. இப்படி உருவாகும் கனவு ஆணும் அவளுக்குக் கை சேராதபோது அவளுடைய உடல் உறுப்புகளில் ஒன்றை இழந்தவளாகவே அவள் வேதனைக்குள்ளாகிறாள்.

சமந்தா கதையிலும்கூட எனக்கு இதுதான் தோன்றியது. சமந்தாவின் தேர்வாகவே நாகசைதன்யா இருக்கலாம். அவளுடைய உண்மையான தேர்வுதானா அவன்? நாகசைதன்யாவுக்கும் இதே பிரச்சினைக்கு இருக்குமா? ஆண்களும் இப்படியான மனநிலைக்குள்தான் சிக்கி போராடி வெளியே வருகிறார்களா? தெரியவில்லை.

இந்தியாவில் மட்டுமல்லாது, உலகெங்கும் திருமணம் எனும் உறவு பெரும் அழுத்தத்தை இன்று எதிர்கொள்கிறது. இந்த உறவு முக்கியம் என்றும் எல்லாச் சமூகங்களும் உணர்கின்றன. இல்லாவிட்டால், ஏன் தான் தேர்ந்தெடுத்துக்கொண்ட பிரிவு அவ்வளவு வலி தருகிறது என்று சமந்தா எழுதுகிறார்? உறவு பிழைக்க வேண்டும் எனில் அழுத்தம் குறைய வேண்டும். அதற்கு, உறவில் உண்டாகும் இரு தனிநபர்களின் பிரச்சினை இல்லை இது, இரண்டு உலகங்களுக்கு இடையிலான பிரச்சினை எனும் புரிதல் வேண்டுமோ என்று தோன்றுகிறது. இதுபற்றியெல்லாம் நாம் பேச வேண்டும். பேசினால்தானே தெரிந்துகொள்ளவோ, புரிந்துகொள்ளவோ முடியும்? 

Related Articles

Leave a Reply

Back to top button