இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உண்மையான அபிவிருத்திக்கு பொருளாதார அபிவிருத்தியுடன் ஆன்மீக வளர்ச்சியும் அவசியம் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!!

srilanka

நாட்டில் உண்மையான அபிவிருத்தி ஏற்பட வேண்டுமாயின் பொருளாதார அபிவிருத்தி போன்றே ஆன்மீக வளர்ச்சியும் காணப்பட வேண்டும்; என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

2022 வரவு செலவுத் திட்டத்தில் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செலவினத் தலைப்பு குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றுகையலேயே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 பிரதமர் பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

நாட்டில் உண்மையான அபிவிருத்தி ஏற்பட வேண்டுமாயின் பொருளாதார அபிவிருத்தி போன்றே ஆன்மீக வளர்ச்சியும் காணப்பட வேண்டும்;. மக்களை நெறிப்படுத்துதல் மற்றும் ஒழுக்கமானவர்களாக மாற்றும்  பணி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இந்தப் பொறுப்பை நாம் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும்.

இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களாக புத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்த நாம், எதிர்கால சாசனத்தின் முன்னேற்றத்திற்காகவும் உழைக்க வேண்டும் என நம்புகின்றோம்.

இலங்கையின் கலாசாரம் மற்றும் நாகரீகம், தர்ம அறிவினாலும் ஒழுக்கத்தினாலும் போஷிக்கப்பட்ட சம்புத்த சாசனம் கடந்த காலங்களில் பேணப்பட்டது போன்று பேணிப் பாதுகாப்பது எமது தேசியப் பொறுப்பாக நான் கருதுகின்றேன்.

பௌத்த தர்மத்தில் மாற்றம் செய்யாது பாதுகாக்கவும், சங்க சாசனத்தைப் பாதுகாக்கவும், பௌத்த வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்து பாதுகாக்கவும், விழுமியங்கள் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கவும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த எமது அமைச்சு திட்டமிட்டுள்ளது.

பிற அனைத்து மதங்கள் தொடர்பில் செயற்படுவதும் நமது அமைச்சகத்தின் விடயப் பொறுப்பிற்குள் உள்ளடங்கும்.  அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து மதங்களையும் பாதுகாப்பது நமது பொறுப்பு.
அதன்படி, பிற அனைத்து வழிபாட்டுத் தலங்களின் வளர்ச்சிக்கும், மதகுருமார்களின் கல்வி நலனுக்காகவும் பாடுபட்டுள்ளோம்.

சமய விழுமியங்களை சமூகமயமாக்குவதற்காக அறநெறி பாடசாலை அமைப்பை வலுப்படுத்துவதற்காக பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் விவகார திணைக்களங்களின் ஊடாக வருடாந்தம் பெருந்தொகையான நிதி செலவிடப்படுகிறது. மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தவும், பரஸ்பர ஒத்துழைப்புடன் வாழும் சமூகத்தை உருவாக்கவும் நாங்கள் இதையெல்லாம் செய்கின்றோம்.

கலாசாரம், இலக்கியம், கலைகள் ஆகியவற்றை உயர்த்த பாடுபட்டு வருகிறோம். அதன்படி, கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய திரைப்படக் கழகம், பொதுத் அரங்காட்டுகை சபை மூலம் உயர்தர கலைப் படைப்புகளை உருவாக்கத் தேவையான சூழலை உருவாக்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று கலைத்துறையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கான நலத்திட்டங்களை ஏற்படுத்தும் வேலைத்திட்டமொன்றை 2022ஆம் ஆண்டிலிருந்த தொடர்ச்சியாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.

வரலாறு, தொல்லியல் மற்றும் தேசிய பாரம்பரியம் ஆகியவை ஒரு நாட்டின் அடையாளங்களாகும். அதன்படி, தொல்பொருள் திணைக்களம், மத்திய கலாச்சார நிதியம், தேசிய அருங்காட்சியகத் துறையை மறுசீரமைத்து தேசிய அடையாளத்தை எதிர்கால சந்ததியினருக்கு உரிமையாக்கி நாம் நமது பொறுப்பை நிறைவேற்றி வருகிறோம் என்று தெரிவிக்க வேண்டும்.

ஒழுக்கமான நபரை உருவாக்குவதற்கு போதைப்பொருள் பாவனை மற்றும் பல்வேறு துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுவடுவது என்பன தடையாக காணப்படுகின்றன.  அவ்வாறானவர்களை இனங்கண்டு, சமயப் பின்னணியின் கீழ் அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து, சமூகத்துடன் இணைப்பதற்கான வேலைத்திட்டத்தை எமது அமைச்சு ஆரம்பித்துள்ளது. இதனை 2022ம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முழு உலகையும் பாதித்துள்ள கொவிட் சூழ்நிலையால், திட்டமிட்ட செயற்பாடுகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எனினும், 2022 ஆம் ஆண்டில், எமது மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் இராஜாங்க அமைச்சின் அதிகபட்ச பங்களிப்புடன் குறிப்பிட்ட மற்றும் விரும்பிய இலக்குகளை அடைவதற்கான மூலோபாய உத்திகளை பின்பற்ற திட்டமிட்டுள்ளோம்.

எனவே, இந்த விடயங்களில் எமது அமைச்சு விசேட கவனம் செலுத்தி வருகின்றது என்பதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் என கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

செய்தியாளர். கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button