இலங்கைசெய்திகள்

எமக்கு நடக்கும் அநீதியை திரும்பிப் பாருங்கள்! – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவிப்பு

எமக்கு நடக்கும் அநீதியை நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்களும் திரும்பிப் பாருங்கள் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் சிவானந்தம் ஜெனிற்றா தெரிவித்தார்.

வவுனியாவில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இடம்பெற்ற போராட்டத்தின் பின் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி பல்கலைக்கழகத்தைத் திறந்து வைப்பதற்காக வந்துள்ளார். நாம் இதுவரை காலமும் எமது உறவுகளைத் தேடி தெருவில் நின்று 13 வருடங்களாகப் போராடி வருகின்றோம். கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளையே தேடுகின்றோம். இந்த நாட்டில் நீதி மறுக்கப்பட்ட போதும் நாம் சர்வதேசத்தை நோக்கித்தான் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

கொலைக் குற்றவாளியாக இருந்தவர் தற்போது இந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்து வவுனியாவில் உள்ள பல்கலைக்கழகத்தைத் திறந்து வைக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்கு இருக்கின்றார்கள். எமது பகுதியில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நிலையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுத்துப் பெயர்ப்பலகையை மாற்றியுள்ளார்கள். அப்படியானவற்றை தட்டிக் கேட்க வேண்டியவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள்.

எமது உறவுகள் இதுவரை நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இதுவரை நீதி கிடைக்கவில்லை. அதனால் ஜனாதிபதி இங்கு வந்தபோது நாம் எதிர்ப்பைக் காட்டுகின்றோம். நான் வீட்டிலிருந்து வெளியேறி இங்கு வரும் வரை அரச புலனாய்வுத் துறையினர் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள். எமது உறவுகளை அங்கும் இங்குமாக மறித்து ஒன்றுசேர விடாது தடுத்துள்ளார்கள். அப்படியான நிலையிலும் நாம் இங்கு வந்துள்ளோம். நாம் ஜனாதிபதியுடன் கதைக்க வரவில்லை.

ஜனாதிபதியிடம் நான்கு கேள்விகள் கேட்க வேண்டும். கொலையைச் செய்த குற்றவாளி ஜனாதிபதியாக இருக்கின்றார். மக்களை ஏமாற்றித்தான் செயற்படுகிறார்கள். எமக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, சர்வதேசம் இந்த நாட்டு ஜனாதிபதியை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஏற்றி நீதியைப் பெற்றுத்தர வேண்டும். இதனை வலியுறுத்தி நாம் பல வருடங்களாகப் போராடுகின்றோம்.

இந்த மண்ணில் எமக்கு நீதியைப் பெறக் கருத்துச் சுதந்திரத்தைக் கூட பரிமாற முடியவில்லை. எம்மை மிகவும் வேனைக்குரியதாக நடத்துகின்றார்கள். கொரோனாவைப் பொருட்படுத்தாமல் நாம் செத்தாலும் பரவாயில்லை. எமது உறவுகள்தான் வேண்டும் எனப் போராடுகின்றோம். எமக்கு நடக்கும் அநீதியை நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்களும் திரும்பிப் பாருங்கள். எமக்கான பாதைகள் மறிக்கப்படுகின்றன. அரச புலனாய்வாளர்கள் அச்சுறுத்துகின்றார்கள். எமது உறவுகளுக்காகவே போராடுகின்றோம். மார்ச்சில் நடைபெறும் ஐ.நா. கூட்டத்திலாவது சர்வதேசம் நீதியைப் பெற்றுத்தர வேண்டும். நாம் இழப்பீட்டையோ அல்லது மரணச் சான்றிதழையோ கோரவில்லை. நீதியே வேண்டும்” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button