வடக்கு – கிழக்கு ‘தமிழர் தாயகம்’ என்பதை உறுதிசெய்க! – இந்தியாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் 1.4ஆம் சரத்தில் குறிப்பிட்டவாறு, இலங்கைத்தீவின் வடக்கு – கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம் என்பதை உறுதிசெய்தே, இலங்கைக்கான உதவிகளை இந்தியா வழங்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாடு தோழமை மையம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
“இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வமாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியாவின் உதவிகளை உறுதிப்படுத்தவும், இந்தியாவின் பொருளாதார முதலீட்டு முயற்சிகள், மீனவர்கள் விவகாரம், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தல் உட்பட பல விடயங்கள் பேசப்பட இருப்பதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
பொருளதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி, மருத்துவ தேவைகள் உட்பட மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான இந்தியாவின் உதவிகள் இந்திய தேசத்தின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.
குறிப்பாக இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் 1.4ஆம் சரத்தில் உறுதி செய்யப்பட்ட இலங்கைத்தீவின் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் பகுதியில், இடம்பெற்று வரும் நில அபகரிப்பு மற்றும் சிங்களக் குடியேற்றங்கள், ஒப்பந்தத்தின் அச்சரத்தை அழித்து வருவதாக அமைகின்றது.
இந்நிலையில், இலங்கைக்கான இந்தியாவின் உதவி வழங்கல் என்பது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் 1.4ஆம் சரத்தை உறுதி செய்தே வழங்கப்பட வேண்டும் எனக் கோருகின்றோம்” – என்றுள்ளது.