“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கான தமது விஜயத்தின்போது தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.”
-இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் நேரில் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
அதேவேளை, தமிழர்கள் இங்கு எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமரிடம் பல விடயங்களை நேரில் பேசத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆவலாக உள்ளது எனவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.
நேற்று மாலை 3.30 மணியளவில் கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, துணைத் தூதுவர் வினோத் ஜேக்கப், அரசியல்துறை முதன்மைச் செயலாளர் திருமதி பானு பிரகாஷ் ஆகியோரோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் அதன் பேச்சாளர் எம்.எ.சுமந்திரனும் பேச்சு நடத்தினர். இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
மேற்படி சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில்,
“இந்தச் சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்ஷ்ங்கர் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அடுத்த மாதம் இலங்கைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிப் பேசப்பட்டன. அத்தோடு வடக்கு, கிழக்கின் பொருளாதார அபிவிருத்தியில் இந்தியாவின் பங்களிப்பு பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்போதும் அதற்குப் பின்னரும் இலங்கையின் தமிழ்த் தேசிய பிரச்சினை தீர்வு சம்பந்தமாக தொடர்ந்து வந்த இலங்கை அரசுகள் இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்குவதாக இருந்தது. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்பண்ணுவதில் இந்தியா தொடர்ச்சியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கின்ற அதேவேளையிலே தொடர்ந்தும் இந்தியா அந்தப் பங்களிப்பைச் செய்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சம்பந்தன் முன்வைத்தார்.
ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் வேறும் பல விடயங்கள் தீர்க்கமாக ஆராயப்பட்டன” – என்றார்.