பைசர், மொடர்னா, ஜோன்சன் அன் ஜொன்சன் தடுப்பூசிகளினால் கிடைக்கப்பெறும் பாதுகாப்பு பாரியளவில் குறைவு
உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்று பரவல் தொடர்ந்தும் காணப்படுகின்ற நிலையில் அதனை எதிர்கொள்வதற்காக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமும் பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் பிரதானமாக வழங்கப்படும் தடுப்பூசிகள் தொடர்பில் அமெரிக்காவின் மருத்துவ நிறுவனமொன்று முன்னெடுத்த ஆய்வில் புதிய தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய பைசர், மொடர்னா மற்றும் ஜோன்சன் அன் ஜொன்சன் ஆகிய 3 தடுப்பூசிகளினாலும் ஏற்படும் பாதுகாப்பானது கடந்த 6 மாதங்களில் சடுதியாகக் குறைவடைந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று தடுப்பூசிகளினாலும் கிடைக்கப்பெறும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வில் குறித்த அமெரிக்க நிறுவனத்தினால் சுமார் 8 இலட்சம் பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களின் உடலில் வைரசுக்கு எதிராக போராடக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு காணப்படுகிறது என்பது இந்த ஆய்வில் பரிசீலிக்கப்பட்டது.
அதற்கமைய கடந்த மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் 86.9 சதவீதமாகக் காணப்பட்ட பைசர் தடுப்பூசியின் பாதுகாப்பு 6 மாதங்களில் 43 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதே போன்று 89 சதவீதமாகக் காணப்பட்ட மொடர்ணா தடுப்பூசியின் பாதுகாப்பு 6 மாதங்களில் 58 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும் 86.4 சதவீதமாகக் காணப்பட்ட ஜொன்சன் அன்ட் ஜொன்சன் தடுப்பூசியின் பாதுகாப்பு 6 மாதங்களில் 13 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளமை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் மூலம் பைசர், மொடர்ணா மற்றும் ஜொன்சன் அன்ட் ஜொன்சன் ஆகிய 3 தடுப்பூசிகளினாலும் கொவிட் வைரசுக்கு எதிராக கிடைக்கப் பெறும் பாதுகாப்பானது 86 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாகக் குறைவடைந்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆய்வின் முடிவுகள் இலங்கையில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெளிவுபடுத்துகையில் ,
தடுப்பூசியினால் பெற்றுக் கொள்ளப்படும் பாதுகாப்பு குறைவடைகிறது என்று கிடைத்துள்ள அறிவித்தல் சிறந்ததொன்றல்ல.
குறிப்பாக ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பைசர் மற்றும் மொடர்ணா ஆகிய தடுப்பூசிகள் இலங்கையில் கனிசமாளவானோருக்கு வழங்கப்பட்டுள்ளன.
எனவே எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டவர்களுக்கும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிதல் என்பவற்றை ஆய்வினை முன்னெடுத்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
எனவே அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பாரதூரமாக எச்சரிக்கின்றோம். உலகில் காணப்படுகின்ற முன்அனுபவம் தொடர்பில் நாம் அவதானத்துடன் இருக்கின்றோம்.
எதிர்வரும் டிசம்பர் மாத்தை ஆகஸ்ட் மாதத்தில் காணப்பட்ட நிலைமைக்கு உட்படுத்த வேண்டிய தேவை கிடையாது.
எனவே அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசத்தை அணியுமாறும் , நபர்களுக்கிடையில் இடைவெளியைப் பேணுமாறும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என்றார்.