இலங்கைசெய்திகள்

எண்ணெய்க் குதங்கள் ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

இதனிடையே, திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்திச் செய்வதற்காக இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்கும் வகையில் கைச்சாத்திடப்பட்ட உடனபடிக்கையுடன் தொடர்புடைய அமைச்சரவை தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் வக்கமுல்ல உதித்த தேரர் சார்பில் சட்டத்தரணி சுனில் வட்டகல இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

வழக்கின் பிரதிவாதிகளாக ஜனாதிபதிக்குப் பதிலாக சட்டமா அதிபர், ஜனாதிபதி செயலாளர், நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், எரிசக்தி அமைச்சர், கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்ட 47 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர் .

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்து அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்திய எரிபொருள் நிறுவனம் உள்ளிட்ட தரப்பினர் நேற்றுமுன்தினம் கொழும்பில் கைச்சாத்திட்டனர்.

இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ் இருந்த 99 எண்ணெய்க் குதங்களில் 85 குதங்களின் நிர்வாகம் இலங்கைக்குக் கிடைத்துள்ளமை வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தின்படி 14 குதங்கள் இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கும், 24 குதங்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கும், எஞ்சிய 61 குதங்கள் Trinco Petroleum Terminal நிறுவனத்துக்கும் காணியுடன் 50 வருடங்களுக்குக் குத்தகைக்கு வழங்கப்படுகின்றன.

Trinco Petroleum Terminal நிறுவனத்தின் 51 வீத பங்குகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கும், 49 வீத பங்குகள் இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கும் உரித்தாகின்றன.

நேற்றுமுன்தினம் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஏதாவது ஒரு காரணத்தால் ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனத்தால் முன்னெடுத்துச் செல்லப்படும் குதங்களை Trinco Petroleum Terminal நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்.

இந்த நிறுவனங்களுக்கு இடையிலான எந்தவொரு பிணக்கும் சிங்கப்பூரிலுள்ள சர்வதேச மத்தியஸ்த நிலையமொன்றின் ஊடாகத் தீர்க்கப்பட வேண்டும் எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button