தெற்கு அரசியலில் சர்ச்சைக்குரிய அம்பலப்படுத்தலை வெகுவிரைவில் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா வெளியிடுவார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரான நிமல் லான்சா, கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சுப் பதவியை வகிக்கின்றார்.
எனினும், அமைச்சின் செயலாளரின் தலையீடு, அரசியல் காரணிகள் உட்பட மேலும் சில விடயங்களை அடிப்படையாகக்கொண்டு குறித்த அமைச்சுப் பதவியைத் துறப்பதற்கு நிமல் லான்சா தயாராகிவிட்டார் எனவும், இதன் ஆரம்பகட்டமாக தனது பிரத்தியேக பணியாளர்களை அமைச்சிலிருந்து விலக்கியுள்ளார் எனவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இராஜிநாமாக் கடிதத்தை தயார் நிலையில் வைத்துள்ள நிமல் லான்சாவை சமரசப்படுத்தும் முயற்சியில் மொட்டு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
பஸில் ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் நிமல் லான்சா ஏன் இத்தகையதொரு நகர்வைக் கையாள்கின்றார் என்பது ஆளுங்கட்சியினருக்கு வியப்பாக உள்ளது. அண்மைக்காலமாக அரசின் செயற்பாடுகளையும் அவர் கடுமையாக விமர்சித்து வருகின்றார்.
நிமல் லான்சாவை சமரசப்படுத்தும் முயற்சி தோல்வி அடையும் பட்சத்தில், முக்கியமான சில விடயங்களை அம்பலப்படுத்திவிட்டு, அவர் பதவி துறப்பார் என்று தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு, மற்றுமொரு இராஜாங்க அமைச்சரான சனத் நிஷாந்த அச்சுறுத்தல் விடுக்கும் குரல் பதிவு தற்போது இணைய ஊடகங்களில் வைரலாகியுள்ளன.