அவுஸ்ரேலியா மெல்பேர்ன் தமிழ் பெண்ணுக்கு மேலும் 25 ஆண்டு சிறை
குழந்தைகளைப் பராமரிப்பதற்கென இந்தியாவிலிருந்து அழைத்து வந்த மூதாட்டி ஒருவரை கொடுமைப்படுத்தினார் என்றும் குறிப்பிட்ட பெண்ணின் விஸாக்காலம் முடிவடைந்த பிறகும் திருட்டுத்தனமாக வீட்டில் ஒளித்துவைத்திருந்தார் என்றும் எட்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் பெண் மேலும் 25 வருட சிறைத்தண்டனைக்குள் சிக்கக்கூடிய புதிய வழக்கில் மாட்டியிருக்கிறார் என்று நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப்புதிய வழக்கு தொடர்பான விசாரணைகளை நேற்று வெள்ளிக்கிழமை விக்டோரிய நீதிமன்றத்தில் நடைபெற்றது.
பராமரிப்பாளரை கொடுமைப்படுத்தினார் என்ற குற்றத்தில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், அப்போது உளநல விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த பராமரிப்பாளரை தொலைபேசியில் தொடர்புகொண்ட, குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெண், தனக்கு எதிரான வழக்கினை திசை திருப்புவதற்காக முயற்சித்தார் என்று பொலீஸார் தரப்பில் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சிறைச்சாலையிலிருந்து காணொலி வழியாக நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட குறிப்பிட்ட பெண், தனக்கு எதிரான புதிய குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். மெல்பேர்னிலுள்ள அங்காடியின் பொதுத்தொலைபேசியொன்றிலிருந்து அழைப்பெடுத்து, தனக்கு எதிரான வழக்கினை கைவிடும்படியும் பொலீஸை நம்பவேண்டாம் என்றும் தமிழ் மொழிபெயர்ப்பாளர் என்ற போர்வையில் ஆலோசனை வழங்கி, வழக்கினை திசை திருப்பப் பார்த்தார் என்று பொலீஸார் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்ட தமிழ்பெண் நிராகரித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கப்பட்டால், இவருக்கு மேலும் 25 வருட சிறைத்தண்டனை கிடைக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.