இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

மீன்பிடித்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் – சாணக்கியன்

எமது மீனவர்களுக்கு நீதி கோரி நடத்தும் போராட்டம் இந்தியாவிற்கு எதிரானதோ அல்லது தமிழக மீனவர்களுக்கு எதிரானதோ அல்ல, இது எமது நியாயத்தை நிலைநாட்டும் போராட்டமாகும், நாடுகளுக்கு இடையிலான மீனவர்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியே போராடுகின்றோம் எனவும், சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தி பிரச்சினைகளை தடுக்க முடியாது போனால் அமைச்சர் உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்து மீறிய இழுவைப்படகு மீன்பிடிக்கு எதிராக முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரையிலான மீனவர்களுக்கு நீதி கோரிய போராட்டம் இன்று இடம்பெற்ற வேளையில் போரட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி கருத்து தெரிவிக்கையில்,

நீதி இல்லாத இந்த நாட்டில் மீனவர்களுக்கு நீதி கோரி நாம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம், மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் நான் கேள்விகளை கேட்கின்ற வேளையில் மீன்பிடித்துறை அமைச்சர், ரஜனிகாந்த்தின் திரைப்பட வசனங்களை கூறி கதைகளை கூறினார், ஆனால் கிழக்கு மாகாணத்திற்கு நான் முன்வைத்த எந்த கோரிக்கையும் அவர் நிறைவேற்றிக்கொடுத்ததில்லை. 

எமது கோரிக்கைகளைத்தான் அவரால் நிறைவேற்ற முடியாது போனாலும் கூட இலங்கையில் இருக்கும் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலமாக அவருக்கு  வாக்களித்த எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.அதற்கு கூட அவரால் முடியாது போனால் இந்த பதவி அவருக்கு அனாவசியமான பதவியாகும் என்றே கூற வேண்டும்.

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை அவரால் நிறைவேற்ற முடியவில்லை என்றால், அவருக்காக வாக்களித்த மக்களுக்கு அவரால் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி எழுகின்றது.

இதனை மக்கள் உணர வேண்டும். இன்று நாம் முன்னெடுத்த போராட்டத்தில் மீனவர்கள் கலந்துகொள்ளக் கூடாது என பல தடைகள் வருவதாகும், அமைச்சு மட்டத்தில் இருந்து நெருக்கடி வருவதாகவும் காலையில் இருந்தே எமது மீனவர்கள் எனக்கு தொலைபேசி மூலமாக தெரிவித்தனர்.

மக்களுக்கான போராட்டத்தை கூட போராட விடாது தடுக்கும் அமைச்சர் இந்த நாட்டிற்கு ஒரு அமைச்சராக இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்த சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தி பிரச்சினைகளை தடுக்க முடியாது போனால் அமைச்சர் உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். அதேபோல் அவருக்கு வாக்களித்த மக்களும் இதனை வலியுறுத்த வேண்டும்.

போராட்டதிற்கு அழைப்பு விடுத்து எவரும் வருவதில்லை, இதில் அழைப்பு இல்லாது சகலரும் மக்களுக்காக கலந்துகொண்டிருக்க வேண்டும், மக்கள் பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு இவ்வாறு மக்கள் போராட்டங்களில் கலந்துகொள்ளாது போனமை குறித்தும் மக்கள் சிந்திக்க வேண்டும். மீனவர்களின் சொந்த நிதியை செலவழித்து முல்லைத்தீவில் இருந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்த மீனவர்களுக்கு இருக்கும் அக்கறை கூட, நீங்கள் வாக்களித்து உங்களின் தலைவர்கள் என  தெரிவு செய்யப்பட சிலருக்கு இல்லை. அதேபோல் இந்த போரட்டம்  இந்தியாவிற்கு எதிரானதோ அல்லது இந்திய தமிழக மீனவர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. இந்த நாட்டில் மட்டுமல்ல உலகத்திலே நடக்கும் சட்டவிரோத செயற்பாடுகளை எதிர்க்கும் நபர்களே நாம். இந்த போராட்டமும் சட்டவிரோத செயற்பாடுக்கு எதிரான போராட்டம், இதனை இந்தியாவிற்கு எதிரான போராட்டமாக மாற்ற சிலர் நடவடிக்கை எடுக்கின்றனர். 

இந்தியாவிற்கு நாம் கூறும் செய்தி என்னவென்றால் உங்களில் ஒரு சிலர் செய்யும் தவறுகள் காரணமாக இந்தியாவிற்கும் இது ஒரு அவமானம், ஆகவே இது குறித்து  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்., இந்திய உயர்மட்ட குழு இலங்கைக்கு வந்து போகின்றனர், அவர்களுடன் ஏன் இது குறித்து பேச முடியாது. தரையில் போராட்டம் செய்துள்ளோம், இன்று கடலிலும் செய்துள்ளோம், அடுத்ததாக ஆகாயத்தில் தான் போராட்டம் செய்ய  வேண்டியுள்ளது, அதனையும் செய்யும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள், அவ்வாறான தேவை ஏற்பட்டால் அதனையும் ஏதேனும் ஒரு விதத்தில் செய்து முடிப்போம் என்றார். 

Related Articles

Leave a Reply

Back to top button