ஆயிரக்கணக்கான சிறிய கோள்களும் விண்கற்களும் விண்வெளியில் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. இதில் சில கோள்கள் மற்றும் விண்கற்கள் அவ்வபோது பூமியை நோக்கி வருவதும் இதனால் பூமிக்கு ஆபத்து வந்துவிடுமோ என நாம் அஞ்சுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. சில நேரங்களில் இந்த விண்கற்கள் பூமியை தாக்கி விடுவதும் உண்டு.
அந்த வகையில் இந்திய நேரப்படி நேற்று (19.01.2022) அதிகாலை 2.45 மணிக்கு பூமிக்கு மிக அருகில் ஒரு விண்கல் கடந்து சென்றது. இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் ஜனவரி 12 ஆம் தேதி எச்சரித்து இருந்த நிலையில் அந்த விண்கல்லிற்கு 7482 எனப் பெரியட்டதோடு பூமிக்கு மிக அருகில் இந்த விண்கல் கடந்து செல்லும் எனவும் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நேற்று இந்த விண்கல் பூமிக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றிருக்கிறது.
570 நாட்களாக பயணம் செய்த இந்த விண்கல் பூமியை நோக்கி 45 ஆயிரம் மைல் வேகத்தில் வந்ததாகவும் 3,450 அடி உயரம் கொண்ட இது பூமிக்கு அருகில் 19.3 லட்சம் மைல் தொலைவில் கடந்த சென்றதாகவும் கூறப்படுகிறது. பூமியில் இருந்து இது சற்று தூரமாகக் கருதப்பட்டாலும் கடந்த 2019 ஆம் ஆண்டு 43 ஆயிரம் மைல் தொலைவில் ஒரு விண்கல் கடந்து சென்றதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த மாதத்தில் மட்டும் 5 விண்கற்கள் பூமியை நோக்கி வரும் எனவும் அது மிக நெருக்கமாக பூமியை கடந்து செல்லும் எனவும் நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.