இலங்கை

மனோவுக்கு அமெரிக்கா அழைப்பு!

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தலைமையிலான த.மு.கூ. தூதுக்குழு இன்று இலங்கைக்கான அமெரிக்கப் பதில் தூதுவரைக் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியது.

இந்தச் சந்திப்பின்போது தற்போது நடைபெறும் தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் கூட்டுச் செயற்பாடு, தேசிய அரங்கில் மலையகத் தமிழ் மக்களின் எழுச்சி, இலங்கை தேசிய இனப்பிரச்சினையில் அமெரிக்காவின் பங்கு, பொறுப்புக்கூறல், எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டங்கள் ஆகியவை பற்றி உரையாடப்பட்டன.

புதிய வருடத்தில் அமெரிக்காவில் இருந்து அரச பிரமுகர்கள், அதிகாரிகள் இலங்கை வரவுள்ளனர் எனவும், அவர்கள் தமிழ் முற்போக்குக் கூட்டணி உட்பட இலங்கையின் அனைத்துத் தரப்பினரையும் சந்திக்க ஆவலாக இருக்கின்றனர் எனவும் அமெரிக்கப் பதில் தூதர் தெரிவித்தார்.

அதேபோல் அமெரிக்கா வந்து இராஜாங்க திணைக்களத் அதிகாரிகளை சந்திக்கும்படியும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பிக்கு அமெரிக்கப் பதில் தூதர் அழைப்பு விடுத்தார்.

தற்போதைய தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் கூட்டுச் செயற்பாட்டின் பின்னர், தேசிய, சர்வதேசிய அரங்குகளில் நாம் முன்வைக்கவுள்ள, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச யோசனைகள் அடங்கிய ஆவணத்துடன் நாம் சர்வதேச சமூகத்தை காத்திரமாக எதிர்கொள்வோம் என த.மு.கூ. தலைவர் மனோ கணேசன் பதிலளித்தார்.

இந்தச் சந்திப்பின்போது அமெரிக்கத் தரப்பில் பதில் தூதுவர் மார்டின் கெலி, பதில் துணை தூதர் சுசன் வோல்க், அரசியல் அதிகாரி ஜெப்ரி சனின் ஆகியோரும், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் தலைவர் மனோ எம்.பியுடன், த.மு.கூ. நிதி செயலாளர் கண்டி மாவட்ட எம்.பி. எம். வேலு குமார், பொதுச்செயலாளர் சந்திரா சாப்டர், இணைத் தவிசாளர் பேராசிரியர் விஜயசந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button