இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காகத் தமிழ் பேசும் கட்சிகளின் சார்பில் தயாரிக்கப்படும் பொது ஆவணம் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி நாளை வியாழக்கிழமை இறுதி முடிவை எடுக்கவுள்ளது.
இதற்காக அக்கூட்டணியின் அரசியல்குழு நாளை அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைக்குழு கூட்டம் ‘ஒன்லைன்’ மூலம் இன்று நடைபெற்றது. கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் உட்பட தலைமைக்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தம் என அறியப்படும், இலங்கை அரசமைப்பில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு அதிகார பரவலாக்கல் சட்டத்தை முழுமையாக அமுலாக்க உரிய அறிவுறுத்தல்களை, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரதான தரப்பு என்ற முறையில், இலங்கை அரசுக்குக் கொடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சார்பாக எழுதப்படவுள்ள பொது ஆவணம் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நவம்பர் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘திண்ணைக் கலந்துரையாடல்’ முதல் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்ட பல்வேறு வரைபுகளின் உள்ளடக்கங்கள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.