யாழில் முன்பள்ளி ஆசிரியர்கள் மாபெரும் போராட்டம்!
வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சம்பள உயர்வு கோரியும், நிரந்தர நியமனம் வழங்கக் கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் அலுவலகத்துக்கு முன்பாகவும், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாகவும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாகவும் அதற்கு உட்பட்ட காலப்பகுதியிலும் முன்பள்ளி ஆசிரியர்களாகக் கடமையாற்றியிருந்தவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 6 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்படுகின்றது. இந்நிலையில், சம்பள உயர்வு அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்துக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆதரவு வழங்கினர். போராட்டக்காரர்களின் இடத்துக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகிய இருவரும் வருகை வந்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட முன்பள்ளி ஆசிரியர்களால் யாழ். மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாகவும் முன்பள்ளி ஆசிரியர்கள் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாண ஆளுநர் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு வவுனியாவுக்குச் சென்றதன் காரணமாக இன்று அவரைச் சந்திக்க முடியாது எனப் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர் என்று ஆளுநர் அலுவலகத்துக்குச் சென்ற முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் ஆளுநரின் செயலாளர் தம்மைச் வந்து சந்திக்க வேண்டும் எனக் கோரி தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.