முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமகால நிலவரம் தொடர்பாக யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
நேற்று (20) யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த நிலையில் பிற்பகல் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் ஆயரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் துமிந்த திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் மற்றும் சுரேன் ராகவன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.
அதற்கு முன்னதாக மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய மொஹிதீன் ஜும்மா பள்ளிவாசலுக்குச் சென்ற மைத்திரிபால சிறிசேன, பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியதுடன் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.