எதற்கும் நான் அஞ்சப்போவதில்லை! – ஜனாதிபதி அறிவிப்பு
உலகின் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு வகையில் தூண்டுதல்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை மேற்கொண்டாலும், அவை எவற்றுக்கும் தாம் அஞ்சப் போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
உடுபந்தாவ – புன்னெஹெபொல சேதனப் பசளை தயாரிக்கும் மத்திய நிலையம் மற்றும் சேதனப் பசளை பயிர்ச்செய்கை இடங்களைப் பார்வையிடுவதற்கு ஜனாதிபதி இன்று சென்றிருந்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்காக, அரசியல் தலைவர்கள் எடுக்காத கடினமான தீர்மானங்களை எடுப்பதற்கு நான் தயார்.
அன்று யுத்தத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று பலர் கேட்டுக்கொண்டனர். ஆனாலும், 30 வருட யுத்தத்தை நிறைவு செய்தது போல் எந்தவிதத் தடைகள் ஏற்பட்டாலும், பசுமை விவசாயத்தை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
தமக்குத் தேவை வாக்குகள் அல்ல, பொதுமக்களுக்கு சரியானதைச் செய்வதாகும் என்றும் சரியானதைச் செய்வதற்காகப் பயப்படாது தீர்மானங்களை மேற்கொண்டு, மக்களின் தேவைகளை மாத்திரம் கண்டறிவதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உலகின் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு வகையில் தூண்டுதல்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை மேற்கொண்டாலும், அவை எவற்றுக்கும் தாம் அஞ்சப் போவதில்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்கள் தம்மைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கே ஆகும் என்றும் கூறினார்.
இதேவேளை, சேதன உரத்தைப் பயன்படுத்திப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி இவ்விஜயத்தை மேற்கொண்டார்.
அதன் பின்னர், உடுபந்தாவ பிரதேச சபை வளாகத்தில் உள்ள கழிவு மீள்சுழற்சி மத்திய நிலத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.